வாழைச்சேனை காகித ஆலையின் 1வது தொகுதி உற்பத்திகள் விற்பனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைப்பு


(ஏறாவூர் நிருபர் எம்.ஜி.ஏ நாஸர்)
கடந்த ஆறு வருட காலத்தின் பின்னர் மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ள வாழைச்சேனை காகித ஆலையின் முதலாவது தொகுதி உற்பத்திகள் விற்பனைக்காக கொழும்பிற்கு அனுப்பட்டுள்ளன.

இதன்போது சுமார் நாற்பது தொன் எடையுள்ள கனமான கடதாசி; லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆலையின் உதவி முகாமையாளர் சபாபதிப்பிள்ளை அம்பிகாவதி தெரிவித்தார்.

1951 ஆம் ஆண்டு நிருமானிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலையில் 1966 ஆம் ஆண்டு தொடக்கம் வைக்கோலைக்கொண்டு கடதாசி உற்பத்தி செய்யும் நடவடிக்கை நடைபெற்றது. இங்கு சுமார் நான்காயிரம் பேர் வரை பணியாற்றினர்.

பின்னர் கடதாசிகள் வெளிநாட்டிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதையடுத்து உள்ளுர் உற்பத்திகளுக்கு போதியளவு சந்தைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் 2014 ஆம் ஆண்டில் உற்பத்திகள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டன.

2016 ஆம் ஆண்டில் சுயவிருப்பின்பேரில் பலர் இழப்பிட்டினை பெற்றுக்கொண்டு ஓய்வுபெற்றனர்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட திட்டத்திற்கமைவாக கடதாசி ஆலை புனர்நிர்மானம் செய்யப்பட்டு உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் அரிய சந்தர்ப்பம் மீண்டும் உதயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.