32 வருட அரச சேவையில் இருந்து பணிநிறைவு காணும் ஆசிரிய ஆலோசகர் திருமதி தங்கேஸ்வரி சபாரெத்தினம்

(ஷமி மண்டூர்)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றிய திருமதி தங்கேஸ்வரி சபாரெத்தினம் அவர்கள் 32 வருட அரச சேவையில் இருந்து 22.07.2020 அன்று பணிநிறைவு பெற்றுள்ளார்.

மட் களுதாவளையில் கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதியினருக்கு மகளாக 1960.07.23 இல் பிறந்த இவர் தனது இளமைக் கல்வி முதல் க.பொ.த உயர் தரம் வரை மட்/பட்/களுதாவளை தேசிய பாடசாலையில் பயின்று 1986 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொதுக் கலைமானிப் பட்டத்தினையும் பெற்றுக்கொடார்;

ஆசிரியர் தேர்வுப் பரீட்சையில் சித்தி பெற்று 1988.08.22 இல் ஆரம்பக்கல்வி ஆசிரியராக முதல் நியமனம் பெற்று தான் கற்ற பாடசாலையான  மட்/பட்/களுதாவளை தேசிய பாடசாலையில் தனது கல்விக்கான கன்னிப் பணியினை முன்னெடுத்தார். தொடர்ந்து 1991-1992 காலப் பகுதியில் மட்/ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆரம்பக்கல்வி ஆசிரியராகத் தகமை பெற்று மீண்டும் அதேபாடசாலையில் தொடர் சேவையினை 15 வருடங்கள் வழங்கினார்.

மேலும் 2003.02.24 தொடக்கம் 2004.08.15 வரை கஷ்டப் பிரதேச பாடசாலையான மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்திலும் அங்கிருந்து இடமாற்றம் பெற்று 2004.08.16 முதல் 2006.01.24 வரை மட்/பட்/மகிழூர் சரஸ்வதி வித்தியாலயத்திலும் கடமையாற்றினார்.

தொடர்ந்து 17 வருடங்கள் ஆசிரியராக நிறைசேவையாற்றிய இவர் ஆசிரிய ஆலோசகராகப் பதவி உயர்வு பெற்று 2006.01.25 முதல் பட்டிருப்பு கல்வி வலயத்தில் அரும் பணியில் தன்னை அர்ப்பணித்தார்.

ஆசிரியராக பணியாற்றிய காலப்பகுதியில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் அடைவுமட்டம் வீரியம் பெறவும் தரம் 05 புலமைப் பரிசில் சித்தி வீதம் ஏறுமுகம் காணவும் அயராது பாடுபட்டார் இதனால் இவருக்கு பாராட்டுகளும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவம் அளிக்கப்பட்டது.

மேலும் தனது ஆசியர் சேவைக்காலத்தில் மாணவர்களால் மாத்திரமன்றி ஏனைய ஆசிரியர்கள், அதிபர்களால் மதிக்கப்பட்டவராகவும் திகழ்ந்தார் இதற்கு காரணம் இவர் பாடசாலையில் கற்பிதலுக்கு மேலாக இணைப்பாட விதானச் செயற்பாடுகள் மற்றும் அலுவலகப் பணிகள் போன்றவற்றிலும் தானாக முன்நின்று பணியாற்றும் சீர்மியம் ஆகும்.

பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகப் பணிதொடர்ந்த இவர்; வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் சிறக்க பல்வேறு செயற்பாடுகளில் முன்நின்று செயற்பட்டவராகத் திகழ்ந்தார். அந்த வகையில் தவணைப்பரீட்சை வினாத்தாள் தயாரித்தல், மாகாண கணிப்பீட்டு வினாத்தாள், கணிப்பீட்டு அட்டைகள், செயலட்டைகள், விசேட செயற்றிட்ட மாதிரி வினாத்தாள்கள், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான செயற்றிட்டங்கள் போன்றனவும், ஆசிரியர் வாண்மைத்துவ விருத்தி செயலமர்வுகளில் உயிர்த்துடிப்புடன் செயலாற்றியதுடன் ஆசிரியர்களோடு தோழமையான நட்புறவைப் பேணி அவர்களைத் தட்டிக் கொடுத்து உந்துதல் தந்து உறவாடி மாணவர்களின் கற்றல் சிறக்க வல்லமை தந்த சிறந்ததோர் ஆளுமையாவார்.

பட்டிருப்பு கல்விப் புலத்தில் அதிகஷ்ட பாடசாலைகள் காணப்படும் போரதீவுக் கல்விக் கோட்ட பாடசாலைகளுக்கு இவரின் அதிகமான தரிசிப்புக்களும், வழிகாட்டல்களும் இன்று தரம் 05 புலமைப் பரிசில் சித்தி வீத அதிகரிப்புக்கு சான்றாகும்.

இவ்வாறு தனது சேவைக்காலத்தில் 2007இல் அதிபர் தரம் II இல் சித்தி பெற்ற போதிலும் அதிபர் பதவியினை பொறுப்பேற்காது ஆசிரிய ஆலோசகராய் நிலைத்திருந்து தன்னிலை உயர்த்த கலைமாணிப் பட்டம் பெற்று இன்று தனது 60 வது வயதைத்தொட்டு 32 வருடகால ஆசிரியர் சேவை, ஆசிரிய ஆலோசகர் சேவையில் இருந்து 2020.07.23 அன்று பணிநிறைவு பெறுகின்றார் .

இவரின் ஓய்வுக்காலம் உடல், உள ஆரோக்கியமானதாக அமைய வேண்டும் என்பதே கல்விச் சமுகத்தின் பிராத்தனையாகும்.