மட்டக்களப்பில் கிராம சேவகர் பதவிக்காக 42 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நேர்முகப்பரீட்சை

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மாவட்டத்தில் நிலவிவரும் கிராம சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை இன்று (24) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இம்மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் காணப்படும் 82 கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெயர்பட்டியலுக்கமைய 42 விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை இன்று நடைபெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

இதில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு 10 விண்ணப்பதாரிகளும், மண்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கு 11 விண்ணப்பதாரிகளும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 4 விண்ணப்பதாரிகளும், கோறளைப் பற்று பிரதேச செயலகத்திற்கு 08 விண்ணப்பதாரிகளும், மண்முனைப் பற்று பிரதேச செயலகத்திற்கு 08 விண்ணப்பதாரிகளும், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு 01 விண்ணப்பதாரியுமாக மொத்தம் 6 பிரதேச செயலகத்திற்காக 42 பேருக்கான நேர்முகப் பரீட்சை இடம்பெற்றுள்ளது.