ஆலையடிவேம்பு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்படும் வடிகான்களை துப்பரவு செய்யும் பணிகள்

(வி.சுகிர்தகுமார்)
மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கின் தாக்கமும் அதிகரிக்கலாம் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மக்களை விழிப்பூட்டி வருகின்றது.

இந்நிலையில் நீர்தேங்கி நிற்கும் ஆலையடிவேம்பு பிரதேச வடிகான்களை துப்பரவு செய்யும் மிகவும் முக்கியமான பணிகள் ஆலையடிவேம்பு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாதரனின் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பிரதான வடிகான்களில் மண் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் தங்கியுள்ள நிலையில் வடிகான்களால் நீர் வடிந்தோடுவது தடைப்படுவதுடன் இதனால் டெங்கு நோயின் தாக்கம் உருவாகலாம் என பல்வேறு தரப்பினரும் சிந்தித்திருந்த சந்தர்ப்பத்திலேயே பிரதேச சபையினர் இப்பணியினை சரியான நேரத்தில் முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக பிரதான வடிகான்களினூடாக பிரதேசத்தில் தேங்கி நிற்கும் நீர் விரைவாக வெளியேற்றப்படுவதுடன் வெள்ள அனர்த்த நிலையும் குறைவடையும் என கருதப்படுகின்றது.

மேலும் பிரதேசத்தில் உருவாகக்கூடிய டெங்கு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் கட்டுப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்பணிக்காக பிரதேச சபையின் ஜேசிபி வாகனம் உள்ளிட்ட ஊழியர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேநேரம் ஆக்கபூர்வமான இப்பணியை முன்னெடுத்து வரும் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட அனைவருக்கும் பிரதேச மக்கள் நன்றி தெரிவித்தனர்.