சஹ்ரானின் மனைவியின் பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை !

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹஷீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவின் பாதுகாப்பை பலடுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டு சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனியவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. பாத்திமா ஹாதியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவர் வெலிக்கடை சிறையிலிருந்து வெலிகந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதன் பின்னனியில் இத்தகைய முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சிறைச்சாலைகள் திணைக்களம் முழுமையாக முயற்சிக்கும் என நம்புவதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு, ஹாதியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உறுதியான பாதுகாப்பு கட்டமைப்பொன்றினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் ஹாதியா தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம், அவரது பாதுகாப்புக்கு பொறுப்பாக செயற்படும் அதிகாரி உள்ளிட்டோரின் விபரங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறியத் தருமாறும் அந்த குழு கோரியுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கடிதத்தில்; ' அடிப்படை உரிமைகள் மீறப்படுவது குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்தல் அது தொடர்பில் விடயங்களை ஆராய்தல், சிறைக் கைதிகளின் நலன்கள் தொடர்பில் மேற்பார்வை செய்தல், மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு விஜயம் செய்தல் உள்ளிட்ட சுதந்திரம் இல்லாமல் ஆக்கப்பட்ட கைதிகளின் உரிமைகள் தொடர்பில் உறுதிசெய்ய 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு சட்டத்தின் 10(ஆ), 11(ஈ) மற்றும் 28 (2) அத்தியாயங்கள் ஊடாக ஆணைக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி இந்த கடிதமானது 1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு வழங்க்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அனுப்பப்பட்டுள்ளது.' என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.