இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்றுக்காலை 5.30 மணிக்கு அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமத்திற்கான கிரியைகள் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ க.கு.நகுலேஸ்வர சர்மா தலைமையில் ஆரம்பமாகி 8 மணியளவில் நிறைவுற்றது.
பிரதமருக்கும் நாட்டுமக்களுக்கும் அருளாசிவேண்டிய விசேட மஹாம்ருத்யுஞ்ஜய ஹோம நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க கலந்து சிறப்பித்தார். இராணுவ பொலிஸ் பாதுகாப்பு படைத்துறை உயரதிகாரிகள் கலந்துகொணடனர்.
அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ஆலயத்தலைவர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் எந்திரி வ.கருணைநாதன் பிரதி எந்திரி ப.இராசமோகன் மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு நடைபெற்ற விசேட ஹோமம் பிரார்த்தனை வழிபாடுகள் நேற்றுக் காலை 6.30 மணிமுதல் 7மணிவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவை 'ஆலய தரிசனம்' நிகழ்ச்சியில் நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டது.
மாவட்ட இந்துசமய கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி அனைவருக்கும் நன்றிகூறினார்.
இதேபோன்ற மகா யாக நிகழ்வுகள் எதிர்வரும் 23ஆம் திகதி வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறவிருக்கின்றது.