அம்பாறை – கல்முனை வீதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் - CCTV வீடியோ


அம்பாறை – கல்முனை வீதியில் தனியார் சொகுசு வாகன தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 02 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இன்று (11) அதிகாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் சில வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


இன்று (11) அதிகாலை 3.00 மணியளவில் சந்தேக நபர் தானியங்கி ஆயுதத்துடன் அங்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.


ஆயுதத்தை உரப் பையில் மறைத்து வைத்திருந்து, வாகன ஷோரூமில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, பின்னர் அப்பகுதியிலிருந்து தப்பிச் செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது.


மேலும் இந்த தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேக நபரின் விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை, அதே நேரத்தில் அம்பாறை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


ஷோரூமின் நுழைவாயிலில் உள்ள கண்ணாடிக் கதவு முற்றிலுமாக சிதைந்துள்ளது, அதே நேரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் லாரி ஆகியவை துப்பாக்கிச் சூடு காரணமாக சேதமடைந்துள்ளன.