கிழக்கின் சிறகுகள் அமைப்பினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!கிழக்கின் சிறகுகள் அமைப்பினரால் 62 வறிய மாணவர்களுக்கு 2021 ஆம் கல்வியாண்டுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, கல்லடி, டச்பார் கிராமத்தில் கிழக்கின் சிறகுகள் அமைப்பினால் இயக்கப்படும் இலவச கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கே இக்கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சமூக நலன்விரும்பிகளின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கின் சிறகுகள் அமைப்பின் நிறுவனரும் இலவச கல்விநிலையத்தின் ஆசிரியர்களும் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கின் சிறகுகள் அமைப்பின் நிறுவனர் சு.சியாந் உரையாற்றினார். அவர் தனது உரையில் அனுசரணையாளர்களுக்கு நன்றிதெரிவித்ததோடு தமது அமைப்புக்கு உதவிவரும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் நன்றியை தெரிவத்தார். 

மேலும் அவர், வறிய மாணவர்களுக்கு இலவச கல்வி நிலையங்களை நடாத்த எமது உறவுகள் தொடர்ந்தும் தமது உதவிகளை அதிகமாக வழங்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, கிழக்கின் சிறகுகள் அமைப்பினரால் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான கல்விசார் உதவிகள் வறிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.