சிவசக்தி ஐக்கியம் நிகழ்ந்த நாள் தைப்பூசம்!


(கிருசாயிதன்)
கிழக்கிலங்கையில் அம்பறை மாவட்டத்திலே தைப்பூசத் தினை சிறப்பாக வருடா வருடம் உகந்தை முருகன் பதியிலே அனுட்டிப்பது பழமை. எதிர்வரும் வியாழக்கிழமை (28.01.2020) தைப்பூச நன்நாள் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பான விழாவாகும்.   

நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும் முருகனுக்கு உகந்த நாள். அதிலும் கிழக்கிலங்கையில்  உகந்தை முருகன் தேவஸ்தானம் தைப்பூச கொண்டாட்டத்துக்கு சிறப்பு மிகுந்த பதி ஆகும்.

தைப்பூச தினம்
தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும். சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடக ராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடன் இணைந்த பௌர்ணமியில் நிகழும். இந்தச் சிறப்பு மிக்க தினம் தான் தைப் பூச தினம். தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகிறது.

சிவசக்தி ஐக்கியம் இந்த நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்று கூறப்படுகிறது. அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகிறது. 

சிவசக்தி இணைந்த இந்தப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீர், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கிறோம். எனவே உலக இயக்கத்துக்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இந்தத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கிறோம்.

இது வழி வழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகிறது. இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகிறது. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள்.

அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்கள் வழியாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் நாள் இந்நாள். உலகிலேயே உயிரினங்கள் யாவற்றினதும் தோற்றத்துக்கும் வாழ்வுக்கும் செயல்பாடுகளுக்கும் மறைவுக்கும் இயற்கையே காரணியாக அமைகிறது.

இயற்கையை மீறி எதுவும் செயல்படமுடியாது. அதாவது நம்பிக்கைக்கு மேலான சக்தியாகிய இறைசக்தியை மீறிச் செயற்பட முடியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் இயற்கையே விதியாக அமைகிறது.

இதை வலியுறுத்துவதும் இந்தத்தைப்பூச நன்னாளின் ஒரு அம்சமாகும். தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகிறார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகிறார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராஜப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குகிறது.

அத்துடன் வாயு பகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்த நாள் போற்றப்படுகிறது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளார் என்பதை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள் இந்தத் தைப்பூச நன்னாளாகும். சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத்தைப் பூச நன்னாளானது, முருகப் பெருமானுக்குரிய விசேஷ நாளாகவும் விளங்குகிறது. முருகப் பெருமான் அன்னையிடம் வேல் வாங்கிய திருநாளும் இதுவாக அமைகிறது.

இந்த நாட்டின் சூழலுக்கு அமைய வழமை போன்று உகந்தை முருகன் தேவஸ்தானத்தில் நிர்வாகத்தினரால் பூசைகள் இடம் பெறும் என வட்டாரங்கள் தெரிவித்தன.

விரதம்
தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். அன்றைய தினம் தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்ய வேண்டும். 

தைப்பூச நாளில் விரதமிருந்து உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். அல்லது அன்றைய தினம் முழுவதும் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று, சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். நாம் வேண்டும் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும் வல்லமை கொண்டது தைப்பூச விரதம் ஆகும். 

கீழ் காணப்படும் பதிவுகள் கடந்த வருடங்களின் நினைவு கூறல்!