11 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு ! தாய் வெளிநாட்டில்


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 11வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு 02ஆம் குறிச்சி, நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி சிறிய தாயின் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி அவரின் அம்மமாவின் வீட்டில் இருந்தபோது தாக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமி கிராம சேவகரினால் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்த சிறுமியை சிறுமியின் சிறிய தாயார் நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

இந்த நிலையிலேயே நேற்று காலை சிறிய தாயின் வீட்டில் இருந்து குறித்த சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது..

மேலும் சிறுமியின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.