கர்ப்பத் தடை மாத்திரைகள், ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டு சிகரெட் பக்கெட்டுகளுடன் 24,25 வயது இளைஞர்கள் இருவர் கைது!


கொழும்பிலிருந்து கிண்ணியா ஊடாக மூதூருக்கு சென்று கொண்டிருந்த வான் ஒன்றிலிருந்து ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர், இன்று (06) அதிகாலை 03.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளனர் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி வானில் சாரதியான கொழும்பு, வெல்லமபிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞனும் மூதூர், ஜாயா வீதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமாக காணப்பட்ட இந்த வான், கிண்ணியா, கண்டலடியூற்று இராணுவ முகாம் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் வைத்து சோதனையிட்ட போது, வானுக்குள் கோழிக் குஞ்சுகளை ஏற்றிக்கொண்டு வரப்பட்டுள்ளதுடன்,

மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் ஒரு பக்கெட்டும் 1 கிராம் கொண்ட மற்றுரொரு பக்கெட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கர்ப்பத் தடை மாத்திரைகள் 5 ஐ கொண்ட 130 கார்ட்டுகளும் வெளிநாட்டு சிகரெட் பக்கெட்டுகள் 5 உம் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வானில் போதைப்பொருட்களுடன் வந்த நபரொருவர் கிண்ணியாவில் இறங்கியுள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருந்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.