ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த சக்தி விழா!


(சிவம்)
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் ஆதிபராசக்தியான ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா எதிர்வரும் 20.04.2021 செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்திலிருந்து அம்மனை எழுந்தருளப் பண்ணி பாரம்பரிய முறையில் ஊர்வலமாக வந்து கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும்.

மூர்த்தி, தலம், மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றதும் ஓந்தாச்சிமடம் வாவியில் அருகேயமர்ந்து ஆதிபராசக்தியாக நாடி வருபவர்களுக்கு நல்லருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மனின் அலங்கார சக்தி விழாவில் 21.04.2021 புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (22) காலை மதியம் விசேட பூஜையைத் தொடர்ந்து மாலை ஊரின் பிரதான வீதிகளைக் காவல் பண்ணல் இடம்பெறும்.

23.04.2021 வெள்ளிக்கிழமை காலை மதியம் விசேட பூஜையைத் தொடர்ந்து சர்க்கரைப் பொங்கலுக்காக பிற்பல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து வாழைக்காய் எடுத்து வந்து பழுக்கப்பபோடுதல் இடம்பெறும்.

சனிக்கிழமை (24) அதிகாலை கும்பம் சொரிதல் மாலை அம்பாள் முத்துச் சப்பரத்தில் ஆரோகணித்து வீதிகளில் வலம் வந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகலில் விநாயகப் பானைக்கு நெல் குற்றுதலும் இரவு விசேட பூஜையும் இடம்பெறும்.

திங்கட்கிழமை (26) அதிகாலை சக்தி யாகம், அபிஷேகம் பூரண கும்பம் நிறுத்துதல்இ விநாயகப் பானை எழுந்தருளப் பண்ணுதல், காத்தான் கன்னிமார் வைத்தல் மற்றும் மாலை அம்மனுக்கு பூஜை ஒப்புக் கொடுத்தலுடன் வருடாந்த சக்தி விழா நிறைவு பெறும்.

செவ்வாய்க்கிழமை (27) இரவு வைரவர் பூஜையும் மற்றும் வெள்ளிக்கிழமை (30) நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவும் நடைபெற்று அன்னை ஆதிபராசத்தியின் வருடாந்த கிரியைகளுடன் நிறைவுறும்.

கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ ஏ.குமாரலிங்கம் குரு தலைமையில் நடைபெறவுள்ளதோடு யாக பூஜை ஸ்ரீ கற்பக விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பி.கஜேந்திரக் குருக்கள் தலைமையில் நடைபெற்று இனிதே நிறைவுறும்.