தடுப்பூசி திட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள் நிகழ்வு



(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவும் தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும் அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் தடுப்பூசி திட்டத்தினை ஆரம்பித்து ஒரு வருட நிறைவு நாள் நிகழ்வு நாடலாவிய ரீதியில் (29.01.2022) சனிக்கிழமை காலை 10.06 மணிக்கு இடம் பெற்றது.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கொவிட் பரவல் தொடர்பாகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஏற்படும் பயன்கள் தொடர்பாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக, பிரதேச சபை உத்தியோகத்தர்கள் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.