பணவீக்கம் என்பது பிரச்சனையொன்றல்ல : ஆனால் அது தீர்வொன்றாகும்!- இலங்கை மத்திய வங்கி விளக்கம்


மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் 'பணவீக்கம் என்பது பிரச்சனையொன்றல்ல : ஆனால் அது தீர்வொன்றாகும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சில இணைய ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தி மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய வங்கியின் ஆளுநரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளைத் தொடர்புபடுத்தி பல்வேறு இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மூலம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற அறிக்கையொன்றின் சிங்கள மொழி பெயர்ப்பு இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றது.

'பணவீக்கம் என்பது பிரச்சனையொன்றல்ல, ஆனால் தீர்வொன்றாகும். இப்பொருளாதார நெருக்கடி எங்களுக்கேற்பட்ட சிறந்த விடயமொன்றாகவிருக்கலாம் - மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகின்றார்' என்ற தலைப்பின் கீழ் அல்லது இதேபோன்ற தலைப்புகளின் கீழ் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரந்தளவில் செய்திகள் வெளியிடப்படுகின்றமை பல சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பெயரில் வேறு தனிப்பட்ட நபர்களால் எழுதப்பட்ட ' பணவீக்கம் என்பது பிரச்சனையொன்றல்ல , ஆனால் தீர்வொன்றாகும்' என்ற தலைப்பிலான செய்திகளுக்கு அல்லது அதன் உள்ளடக்கங்களுக்கு அவரோ அல்லது இலங்கை மத்திய வங்கியோ பொறுப்பல்ல என்பது பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.