மட்டக்களப்பு வாவியில் மக்களை அச்சுறுத்திய இராட்சத முதலை பிடிப்பட்டது !



மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட வந்தவர்களுக்கு பெரும் உயிர் அச்சுறுத்தலாக இருந்த முதலை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டு குமண காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாவியின் பெரியகல்லாறு, மற்றும் கோட்டைக்கல்லாறு பகுதியில் அதிகளவு மக்கள் மீன்பிடித் தொழிலை நம்பியே தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த ஆற்றுப்பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக முதலைகள் காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தமக்கு அச்சுறுத்தலாக உள்ள முதலைகளைப் பிடிக்குமாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் அப்பகுதி உறுப்பினர் த.சுதாகரணிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்ததற்கு இணங்க, அவர் எடுத்த முயற்சியின் பலனாக வியாழக்கிழமை (15) இரவு குறித்த ஆற்றுப் பகுதிக்கு வந்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகஸ்த்தர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் முதலையைப் பிடிப்பதற்கு இரும்புக் கூடு வைத்துள்ளனர்.

இந்நிலையில் வைத்த கூட்டுக்குள் அகப்பட்ட குறித்த முதலையை வெள்ளிக்கிழமை (16) ஆற்றுக்குள்ளிருந்து வெளியில் கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்ட முதலையை குமண காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று விடவுள்ளதாக அத்திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்தனர்.

முதலைக் கடிக்கு இலக்காகி மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், எனினும் தமது வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஒரு முதலை தற்போது பிடிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் ஒரு முதலை உள்ளது. அதனையும் பிடித்துக் கொண்டு செல்லப்படும் பட்சத்திலேயேதான் தாம் சுதந்திரமாக மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.