கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையை உடனடியாக அமுலாகும் வகையில் கலைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை !

கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையை உடனடியாக அமுலாகும் வகையில் கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய ஆசிரியர் இடமாற்று சபையின் பரிந்துரைக்கமைய நடைமுறைப்படுத்தப்படவிருந்து 12,500 ஆசிரியர்களின் அனைத்து இடமாற்றங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது ஆசிரியர் இடமாற்றமும் வழங்கப்பட்டால் அது மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் , அதனைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதியால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல்கள் , செலவுகள் அதிகரித்துள்ளமை , வரி மற்றும் வாடகை வீட்டு பிரச்சினைகள் உள்ளிட்ட மனிதாபிமானக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இடமாற்றங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள ஆசிரியர்களும் இடமாற்றத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில இடமாற்றங்கள் அரசியல் ரீதியில் நோக்கப்படும் என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சகல காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி ஆசிரியர் இடமாற்ற சபையை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட இந்த பணிப்புரை தொடர்பில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவரிடம் வினவிய போதே இவ்விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டன.