இலங்கைக்கு சென்ற மனைவியும் மகனும் நாடு திரும்பவில்லை – ஜப்பானிய தந்தை பொலிஸில் முறைப்பாடு!


இலங்கைக்கு சென்ற தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையை சேர்ந்த தனது மனைவியும் மகனும் ஜப்பானில் வசித்து வருவதாகவும் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு சென்ற நிலையில் தற்போது வரையில் அவர்கள் நாடு திரும்பவில்லை என தந்தை முறைப்பாடளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஜப்பானியரால் மின்னஞ்சல் மூலம்; முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளதுடன் இந்த முறைப்பாடு சுற்றுலா பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி ஜப்பானுக்கு திரும்ப வேண்டியவர்கள் எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் தற்போது சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.