அம்பாறையில் தமிழ் பிரதேசங்கள் பறிபோகிறது– சரித்திர ஆய்வாளர் திருச்செல்வம் கவலை!

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்கள் அபகரிக்கப்படுவது வேதனைக்குரிய விடயம் என சரித்திர ஆய்வாளரும் கொழும்பு தமிழ் சங்க உறுப்பினருமான என்.கே.எஸ்.திருச்செல்வம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் மத்தியில் அருகிவரும் கவிதை எழுதும் ஆர்வத்தை ஊக்குவிக்க ‘தமிழ் எங்கள் மூச்சென்று முழங்கு’என்ற தலைப்பில் கன்னி கவி அரங்கு கல்முனையில் இடம்பெற்றது.
கல்முனை நால்வர் கோட்டத்தின் தாமரை மண்டபத்தில் பாவாணர்.அக்கரைப்பாக்கியன் தலைமையில் இந்த கவியரங்கு இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் சரித்திர ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிய இந்த கவிரங்கில் ஏழு கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் வளர்ச்சிப்போக்கு தொடர்பாக கருத்துரைகளும் வழங்கப்பட்டன.
இந்த இந்நிகழ்ச்சியில் வளர்ந்துவரும் கவிஞர்கள்,எழுத்தாளர்கள் மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட திருச்செல்வம் உரையாற்றுகையில் தமிழ் கல்வெட்டுக்கள் இலங்கையில் நான்கு பகுதிகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நான்கு இடங்களில் இந்த அம்பாறை மாவட்டமும் ஒன்றாகும்.
தமிழை போற்றி புகழ்பாடும் இந்த மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்கள் அபகரிக்கப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.
தமிழர் பிரதேசங்கள் பறிபோவதை தடுக்கவேண்டுமாயின் எமது இளம் தலைமுறையினர் எமது இலக்கிய வரலாறுகளை தெரிந்து வைத்திருந்தல் அவசியம் என திருச்செல்வம் தெரிவித்தார்.