இதுவா தமிழர் கலைகள்?....

மிழர்களின் பாரம்பரிய கலைகளை வளர்த்த பெருமை முழுக்க முழுக்க இந்து ஆலயங்களையே
சாரும். ஏன் எனின் இந்து மதம் சார்ந்த விடயங்களே கூடுதலாக இக் கலைகளின் கருப்பொருளாக அமைந்திருந்தன. திருவிழாக் காலங்களில் பக்தர்கள் சற்று கழிப்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக கூத்து, கரகம், கும்மி, கோலாட்டம், வசந்தன், சமய,சமூக கதாப்பிரசங்கங்கள் என தமிழர் பாரம்பரியத்தினையும், இந்து மத பண்பாட்டினையும் ஒட்டியதாக இந் நிகழ்வுகள் காணப்பட்டன. கலைகளுக்கும் இந்துசமயத்துக்கும் அடிப்படையில் இருந்து நெருங்கிய உறவுண்டு. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்ததாகவே காணப்படுகின்றன. ஆனால் இன்று இரண்டுக்குமிடையில் உள்ள உறவு விரிசலடைந்து, திரிபடைந்து காணப்படுகின்றது.


பூசைகள், திருவிழாக்களின் போது மேளவாத்தியக் குழுவினரது கச்சேரி இடம் பெறுவது வழக்கம். ஆரம்ப காலங்களில் பயபக்தியுடன் பக்தி பூர்வமாக வாசித்த காலம் போய் தற்போது ஆலயங்களினுள் சினிமாப் பாடலுக்கு வாசிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. தற்காலத்தில் எந்த மேளவாத்தியக் குழுவாக இருந்தாலும் சினிமாப் பாடல்களையே அதிகம் விரும்பி வாசிக்கின்றனர். சென்ற மாதம் ஓர் ஆலயத்துக்கு சென்றிருந்தேன். கற்பக்கிரகத்தினுள்ள மூலமூர்த்திக்கு பூசை நடந்து கொண்டிருந்தபோது மண்டபத்தினுள் இருந்த மேளவாத்தியக் கலைஞர்கள் “ஒட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்டவட்ட பொட்டுக்காறி….” என்கின்ற சினிமாப்பாடலுக்கு வாசித்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து பரிபாலன தெய்வங்களுக்கு பூசை நடக்கும்போது “வராக நதிக்கரையோரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லெண்டு சொன்னேன் கனவாய் ஓடி மறைந்தாள்…..” என்கின்ற சினிமாப்பாடலுக்கு வாசிப்பதனையும் கண்டேன். இவ்வாறாக சினிமாப்பாடல்களுக்கு வாசித்தால் யாரால் பக்திபூர்வமாக கும்பிட முடியும்? சுவாமி கும்பிடும்போது குத்துப் பாட்டுக்கு வாசித்தால் பக்தி வராது குத்தாட்டம் ஒன்றே போடத் தோன்றும். சாமி கும்பிடும். போது அரோகரா அரோகரா என்று கூறும் பக்தர்கள் வாசிக்கப்படும் பாடலின் வரிகளை முணுமுணுத்துக் கெண்டிருப்பதனைக் கண்டிருக்கின்றோம்.

இது மேளவாத்தியக் கலைஞர்களிடத்திலுள்ள முற்று முழுதான பிழை அல்ல. இதற்கு இடம் கொடுத்தது எமது பிழை. அண்மையில் எங்கள் ஊரில் கும்பாவிசேகத்துக்கு வந்திருந்த மேளவாத்திய கலைஞர் ஒருவரிடம் “ ஏன் சினிமாப்பாடலுக்கே அதிகம் வாசிக்கிறிங்க? கோயில்ல பக்திப் பாட்டுக்கு வாசிக்கலாம் தானே” எனக் கேட்டபோது “தம்பி நாங்க பக்திப்பாட்டுகளுக்கும் தேவாரங்களுக்கும் தான் வாசித்து வாற நாங்க உங்கட ஆக்கள் தான் சினிமாப் பாடல்ல அந்தப் பாட்டுகு அடிங்க இந்தப்  பாட்டுக்கு அடிங்க என எங்கள குழப்பி வச்சிரிக்காங்க காசி தாற அவங்கதானே அவங்கட கதையையும் நாங்க கேக்கத்தான் வேண்டும்…” என்றார். இது எம்மில் உள்ள பிழைதான்.
Radio stations போன்று எமக்கு பிடித்த பாடல்களை மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆலயம் இறை வணக்கத்துக்குரிய இடம் அதனை சினிமாபாட்டுக் கேட்பதற்குரிய இடமாக மாற்றி விடக்கூடாது.


கடந்த மாதம் கண்ணகியம்மன் சடங்கின்போது ஓர்அவலத்தினை கண்டேன்.(ஆலயத்தின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) பூம்பந்தல் எழுந்தருளப்பட்டு ஆலயம் நோக்கி வீதி உலா வந்து கெண்டிருந்த போது அதன் முன்னால் சிறுவர்களினால் மிக அழகாக காவடியாட்டம் ஒன்று ஆடப்பட்டு வந்தது. இதில் கொடுமை என்னவென்றால் காவடியாட்டத்திற்கு பயன் படுத்தப்பட்ட இசைக்கருவி வன்ற் வாத்தியம்;(Band) ஆகும். இங்கு காலணித்துவத்தின் செல்வாக்கு வேரூன்றியுள்ளது. வன்ற்(Band)வாத்தியம் மேற்கத்தேயர்களுக்குரிய இசைக்கருவியாகும். இது தொன்று தொட்டு தமிழர்களிடத்தில் பேணப்பட்டு வந்ததல்ல. வெள்ளையர்கள் எமது நாட்டிற்கு வந்தபோது விட்டுச் சென்ற கருவி . அதனை நாம் எமது பாரம்பரிய கலையான காவடியாட்டத்திற்கு இசைத்து எமது கலையை நாமே கொச்சைப்படுத்துகின்றோம். காலணித்துவக் கல்வியினை கற்றுக் கொண்டு எது வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று எண்ணிவிடக் கூடாது. எமது பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம், மதம், கலைகள் பற்றியும் சற்றேனும் சிந்திக்கவேண்டும். “வெள்ளைக்காரனே தமது இசைக்கருவிகளில் எதுவுமே இல்லை தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் விசித்திரமானவை, அதிசயிக்கத்தக்கவை அவற்றில் தான் ஏதோ இருக்கின்றன என எம்மைத் தேடி வந்து ஆய்வு செய்கின்றான்”. ஆனால் நாம் சித்தம் மறந்து பித்துப் பிடித்தவர்கள் போன்று நடந்து கொள்கின்றோம்.


இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள மிக பிரபல்யமான கலை மன்றம் ஒன்று ஓர் ஆலய முன்றலில் கலை நிகழ்வு என்ற பெயரில் கூத்தினை கொன்று கொலையறுத்த விதம் புதுமையாக இருந்தது. எமக்குத் தெரிய கூத்தில் மத்தளமும், சல்லரியுமே இசைக்கருவிகளாக அன்று தொட்டு இன்று வரை பயன் படுத்தப்பட்டு வருகின்றது. கூத்தர்கள் மத்தள அடியினை காதின் ஊடாக உள்வாங்கி அவற்றினை காலிற்கு கொண்டு வந்து காலினுள்ள சதங்கையின் ஊடாக ஆடி வெளிப்படுத்துவர். ஆனால் இந்த கலை மன்றத்தினர் கூத்திற்கு
organ இசைக்கருவியினை பயன்படுத்தி பாடல்களை ஒலிப்பதிவு செய்து ஒலிப்பதிவுக்கு ஏற்றாட் போன்று மேடையில் அபிநயித்துக் காட்டினர். இதற்கு பெயர் கூத்தா?? ஏன்னவென்று சொல்வது? இதுமட்டுமல்ல இன்னும் சிலர் தவில்(மேளம்), சிம்பிள், வன்ற் போன்ற இசைக்கருவிகளையும் கூத்தினுள் புகுத்தி வேடிக்கை பாத்திருக்கின்றனர். இவ்வாறானவர்கள் கூத்து ஆடாவிட்டாலும் பரவாயில்லை இவ்வாறு பாரம்பரிய கலைகளில்  புதுமையை புகுத்தி புதியதோர் கலையினை உருவாக்குகின்றோம் என்று கலைத் தாயை கொச்சைப்படுத்த வேண்டாம் என மன்றாடிக் கேட்கின்றேன்.


இன்று எம்மவர்களை மிகவும் விரைவாக தாக்கிய விடயம் சினிமாவாகும். அங்கு சுற்றி இங்கு சுற்றி படிப்படியாக சினிமாவின் தாக்கம் ஆலயங்களிலும் நுழையலாயிற்று. கிராமப்புறங்களில் ஆலய உற்சவங்கள் , சடங்குகளை முன்னிட்டு பக்தி சினிமாக்கள் திரையிடுவதை ஓர் வழக்கமாக்கியுள்ளனர். அன்று பாரம்பரிய கலைகள் இருந்த இடத்தில் நாம் சினிமாவை புகுத்தியுள்ளோம். அன்று திருவிளையாடல், கந்தன்கருணை, திருவருட்செல்வன், சரஸ்வதி சபதம் என முழுக்க முழுக்க பக்தி பூர்வான கதையிலான படங்கள் வெளிவந்தன அதனை பக்தர்கள் கூடிப்பார்த்தார்கள் இரசித்தார்கள் அதில் ஓர் நியாயம் உள்ளது. ஆனால் இன்று பக்தி படம் என்ற பெயரில் வரும் படங்களை போடுவது எந்த விதத்தில் நியாயம்? இரண்டரை மணி நேரம் படத்தில் கடைசி அரை மணி நேரம் மாத்திரம் பக்தி பூர்வமான காட்சிகளைக் காட்டி விட்டு மீதி நேரம் பூராக கவர்ச்சி, சண்டைக்காட்சிகள், வியாபார நோக்கிலான காட்சிகள், வியாபார நோக்கிலான பாடல்கள் என்பவற்றினை புகுத்தி அதனை திரையிலிட்டு வேறு பார்க்கின்றோம். இவ்வாறே போனால் எமது பாரம்பரிய கலைகளின் நிலை என்னாவது.?


இன்று நகரப்புறத்து ஆலயங்களிலும் சரி கிராமப்புறத்து ஆலயங்களிலும் சரி இசைக் குழுக்களை எடுத்து இசை மழை என்ற பெயரில் சினிமாவில் உள்ள அர்த்தம் புரியாத பாடல்களாகத் தெரிந்து பாடுகின்றனர். இன்று அரத்;தம் புரியாத பாடல்களை பாடுவதும், கேட்பதுவும் ஓர் நாகரீகமாகிவிட்டது. நான்கு மணி நேரம் நிகழ்விற்கு ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் என செலவு செய்கின்றோம். இன்று ஆலயங்களின் திருவிழாக்களுக்கு இசை நிகழ்வுகளை எடுப்பதுவே நகரீகமாகிவிட்டது. இசை நிகழ்வு இல்லாத ஆலயத் திருவிழா சிறப்பற்றதாக மனம் சலிப்பவர்கள் அதிகப்பேரை நாம் காண்கின்றோம். ஆலயம் ஒரு இலட்சம் ரூபா கடனில் இருக்கும் ஆனால் ஒன்றரை இலட்சம் ரூபாய் கொடுத்து இசை நிகழ்ச்சி எடுக்கின்ற பைத்தியகாரத்தனமுள்ளவர்களை நான் அண்மையில் கண்டேன். அதுமட்டுமல்லாது ஏற்கனவே ஒலிப்பதிவு செய்த பாடல்களின் ஒலிப்பதிவினை போட்டு இசைக்கு ஏற்றாட்போன்று பாடி அபிநயித்து ஏமாற்றிவிட்டு சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படி மொக்குத்தனமாக செயற்பட்டால் எமது பாரம்பரிய கலைகளின் நிலை என்னாவது? தமிழர் கலைகளில் இல்லாத விடயம் எதை புதிதாக நாம் இசை நிகழ்வுகளில் காண்கின்றோம்?

அன்று ஆலயங்களில் இடம் பெற்ற நிகழ்வுகள் அனைத்தும் தமிழர் பாரம்பரியத்தினை பண்பாட்டினை ஒட்டியதாகவே காணப்பட்டன. அதேவேளை முழுமையானதாகவும் காணப்பட்டன. “உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆன கதை” போன்று கலைகளின் நிலை இன்றுள்ளது. பாரம்பரியத்தினை சிதைத்து தேவையற்ற புதுப்புது விடயங்களை உட்புகுத்தி அவற்றினை ஆற்றுகை செய்கின்றோம். அதே வேளை ஆலயங்களுடன் சம்பந்தமே இல்லாத விடயங்களையும் உட்புகுத்தியுள்ளோம். தமிழர்களுக்கென்று தனித்துவமான கலைகள் பல உள்ளன. ஆனால் அவற்றினை விடுத்து நாகரீகம் என்ற மாயைக்குள் புகுந்து கண்மூக்குத் தெரியாமல் ஏதேதோ செய்து கொண்டிருக்கின்றோம். ஆலயம் என்பது அமைதிக்கும், அறத்துக்கும் உரிய இடமாகும். ஆனால் இன்று இசை நிகழ்வுகளை ஆலய முன்றலில் இடுவதோடு மட்டுமல்லாது அவ்விடத்தே குடிபோதையில் ஆடி, பாடி அடிபிடிப்பட்டு களியாட்டங்கள் நடக்கின்ற
hotels போன்று ஆகிவிட்டன.


                  தொகுப்பு
வன்னியசிங்கம் வினோதன்
        (நுண்கலைமானி)