கட்டுருவாக்கக் கற்பித்தல் முறையும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் நிலையும்.

(சித்தாண்டி நித்தி) இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய கல்விப் புலத்தில் ஓங்கி ஒலிக்கும் கல்வியின் தரவிருத்தி 5E முறையிலான அறிவானது மாணவர்களது திறன், தகைமைகளை விரைந்து மேம்படுத்துவதுடன் மட்டுமன்றி ஆசிரிய ஆளணியினரது பாரம்பரியமான நடிபங்கிலிருந்து விலக்களித்து கற்றலை மேம்படுத்த உதவுகின்றது.

ஈடுபடுத்தல் 5E மாதிரி முறையின் முதலாவது படிமுறையாகும். மாணவர்களை உளவியல் ரீதியாக குறித்த நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபடுத்தல் வேண்டும். ஈடுபடுத்தல் படிமுறையில் ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடலை ஆரம்பிப்பார். பின்னர் மாணவர்கள் விடயங்களை நன்கு ஆராய்ந்து செயற்படுவதற்குத் தேவையான முன்னறிவை மீட்கும் வகையில் கலந்துரையாடலை விரிவுபடுத்திக் கொள்ளல் வேண்டும். இப் படிமுறையானது வகுப்பு மாணவர்களின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளல், தேவையான முன்னறிவை மீட்டிக் கொள்வதற்கு மாணவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குதல், செயற்பாட்டின் இரண்டாம் படியில் மாணவர்களிடம் எதிர்பார்க்கப்படும் கண்டறியும் விடயங்களுக்குத் தேவையான ஆரம்ப விடயங்களை வழங்குதல் என்பனவாக அமையும்.
கண்டறிதல் 5E  மாதிரி முறையின் இரண்டாவது படியாகும். மாணவர்கள் அடைந்துள்ள அனுபவத்தைக் கொண்டு அவர்களது எண்ணக்கருக்களை மேலும் கண்டறிய முயற்சிப்பதனையே இது குறிக்கின்றது. வளங்களைப் பயன்படுத்தி பிரச்சினைக்கான தீர்வினை தெளிவான விளக்கத்துடனும், தர்க்கரீதியான கலந்துரையாடலுடனும் ஆராய்ந்து முடிவுகளைக் கண்டுபிடிப்பதாகும். இங்கு மாணவ ஈடுபாடு அவசியமாகும்.

விளக்கமளித்தல் 5E  மாதிரி முறையின் மூன்றாம் கட்டமாகும். கற்றல் தொடர்பான விளக்கத்தினை மேற்கொண்ட பின்னர் மாணவக் குழுக்கள் தம்முடைய கண்டறிதல்களையும், உருவாக்கிய பகுப்பாய்வுகளையும் மற்றைய குழுக்களுடன் கலந்துரையாடல் மூலம் விளக்குவதையும் உள்ளடக்குகின்றது. விரிவாக்கல் 5E  மாதிரி முறையின் நான்காவது கட்டமாகும். மாணவர்கள் தமது தேடலை முன்வைக்கும் படி முதல் மூன்றுடனும் சமாந்தரமாக இடம் பெறும். அதாவது தாம் கற்றுக் கொண்ட எண்ணக்கருக்களை நடைமுறை உலகுடன் பிரயோகித்துப் பார்க்கும் படிமுறை இது. மதிப்பிடல் 5E  மாதிரியின் இறுதிப் படிமுறையாகும். மதிப்பீடு என்பது மாணவர்கள் தேர்ச்சி பெற்றமைக்கான சான்றுகளைச் சேகரிக்கும் செயற்பாடாக காணப்படுகின்றது. மதிப்பீடானது கற்றல் தொடர்பாகவும், கற்பித்தல் தொடர்பாகவும் மேற்கொள்ளப்படும். 

கட்டுருவாக்க வாதக் குறைபாடுகளாக நாம் முக்கியமான சில விடயங்களில் கவனத்தினை செலுத்துகின்றபோது கட்டுருவாக்க வாதத்தில் காணப்படும் பிரச்சினைகளில் முக்கியமானது மாணவர்களின் முன்னறிவு தொடர்பானதாகும். ஏனெனில் மொழியறிவு குறைவான மாணவர்களுக்கும், எழுத்தறிவு குறைவான மாணவர்களுக்;கும், மெல்லக்கற்கும் மாணவர்களுக்கும் இக் கற்பித்தல் முறையை குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிறைவேற்றி வெற்றிகான முடியாது. அவ்வாறுபட்ட மாணவர்களுக்கு வேறு வழிமுறைகளையே கையாள வேண்டும். 

இங்கு காணப்படும் குழு ரீதியான செயற்பாடுகளில் வலுக் கொண்ட மாணவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியப்படுத்தப்படுகின்றது. ஏனெனில் வலுவில்லாத மாணவர்கள் வலுக் கொண்ட மாணவர்களை மாதிரியாகக் கொண்டே செயற்பட எத்தனிக்கின்றனர். ஆனால் வலுக் கொண்ட மாணவர்கள் ஒரு குழுவிலோ அல்லது வகுப்பிலோ இல்லையென்றால் குறிப்பிட்ட 5E கற்பித்தல் முறையின் பிரதான பகுதியான குழுச் செயற்பாட்டை பூரணப்படுத்த முடியாது.

அதேவேளை ஆசிரியரின் விளக்கத்திற்கு தைரியமான வினாக்களைக் கேட்கும் திறன் மாணவர்களிடம் காணப்படும் போது தான் அறிவு விரிவாக்கற் படிமுறை விருத்தியாக்கப்படும். இது மெல்லக் கற்கும், திறமை குறைவான மாணவர்களிடம் சாத்தியப்படாது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆசிரியர் ஒரு கடினமான பணியை சந்திக்க நேரிடலாம். ஏனெனில் கல்விச் சூழலோடு முறையாக எதிர்த்து நிற்கும் பிள்ளைகளுக்கே இக்கட்டுருவாக்க அணுகுமுறை பொருத்தமுடையதாக அமையும். 

சந்துரு மரியதாஸ்
உதவி விரிவுரையாளர்,
கல்வி, பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.