சந்திப்பின் பின்னர் அமைச்சர் ஹக்கீம் ஊடகங்களுக்குக் கூறியதாவது:-
“குச்சவெளி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவை வழங்காத போதும் அப்பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனதாக்கிக் கொண்டது. இருந்தபோதும் இன்னும் எஞ்சியுள்ள சபைகளில் எங்கெல்லாம் இணைந்து ஆட்சியமைக்க முடியுமோ அப்பிரதேசங்களில் பரஸ்பர விட்டுக் கொடுப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளோம்.
இந்தத் தேர்தல் முறையில் உள்ள குறைபாட்டினால் பிரதேச சபைகளின் ஆட்சியை அமைப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் சில இடங்களில் எமக்குள் உடன்பாட்டுக்கு வரமுடியாத முரண்பாடுகள் தோன்றியிருந்தன. இருந்தபோதும் தலைமைத்துவ மட்டத்தில் இப்போது நாங்கள் புரிந்துணர்வுடனான உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்.
மீதமுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒருமித்த நிலைப்பாட்டோடு செயற்படுவது தொடர்பில் இணங்கியுள்ளோம்.
சபை நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுவதோடு, பதவிகளையும் நியாயமாகப் பகிர்ந்துகொள்ளும் அடிப்படையிலும் பொதுவான உடன்பாட்டினை நாங்கள் கொண்டுள்ளோம். இயன்றவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு விட்டுக்கொடுப்புடனும், உச்சக்கட்ட புரிந்துணர்வுடனும் இணைந்து பணியாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதையிட்டு எங்கள் திருப்தியை நாங்கள் தெரிவித்தோம்.
மூதூர், தம்பலகாமம், கிண்ணியா உட்பட பல சபைகளில் நாங்கள் இணைந்து செயற்படுவது தொடர்பில் நிலையான உடன்பாட்டுக்கு நாம் வந்துள்ளோம்” – என்றார்.



