அனுபவமிக்க அரசியல்வாதி சம்பந்தனின் கருத்தை சிங்களவர்கள் மதிக்க வேண்டும் !- ஸ்ரீ.சு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள்

எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கருத்துக்களை பெரும்பான்மையின மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என, அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ.சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரா.சம்பந்தனை நேற்று (புதன்கிழமை) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையிலும் அனுபவமிக்க அரசியல்வாதி என்ற வகையிலும் அவர் முன்வைக்கும் கருத்துக்களை சிங்கள பெரும்பான்மை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவரது நிலைப்பாடு நாட்டினை ஐக்கியப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. தமிழ் தலைமைகளின் நிலைப்பாட்டை, தெற்கின் அரசியல்வாதிகள் செவிமடுக்காமையினாலேயே நாட்டில் குழப்பநிலை தொடர்ந்து வருகிறது.

நேர்மையான மற்றும் ஒரு கொள்கையுடன் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்லும் சம்பந்தனுடனான சந்திப்பு மகத்துவம் வாய்ந்ததாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.