யுத்தமில்லை என்பதன் அர்த்தம் முழுமையான சமாதானம் என்று பொருள் அல்ல - முதல்வர் தி.சரவணபவன்


இங்கே யுத்தம் முடிந்து சமாதானம் வந்து விட்டதாக பலர் கூறுகின்றார்கள். நாங்கள் யுத்தத்தை ஆரம்பித்ததன் நோக்கம் இத்தனை வருடம் யுத்தத்தை அனுபவித்ததன் நோக்கம் எமது மக்கள் என்ன கேட்டார்களோ அதன் நோக்கம் நிறைவேறாமல் சமாதானம் மலர்ந்து விட்டதாக கூற முடியாது. யுத்தமில்லை என்பதன் அர்த்தம் சமாதானம் என்று பொருள் அல்ல. என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

எகெட் - கரித்தாஸ் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் தேசிய செடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவானது  (29.08.2018) தாண்டவன்வெளி பெடினான்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

சர்வதேச சமுகத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள இந்த கத்தோலிக்க சமுகம் சில விடயங்களை சர்வதேசத்திடம் எடுத்துக் கூற வேண்டும். முதலாவது ஒரு தீர்வு கிடைத்தால் தான் எங்களுக்கு முழுமையான சமாதானம். இந்த வெளிப்பாடானது உங்கள் மூலமாகவும் சர்வதேசத்தைச் சென்றடைந்தால் சமாதானத்தை நோக்கிய எமது பயணத்திற்கு அது துணையாக இருக்கும். 

இரண்டாவது  இலங்கையர் ஒருவரின் தற்போதைய தனிநபர் வருமானம் 3842 அமெரிக்க டொலராக காட்டப்படுகின்றது. இது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையை மத்திம வருமானம் பெறும் நாடாக உயர்த்தி காட்டியுள்ளது. இப்படி தனிநபர் வருமானமுள்ள நாட்டுக்கு தொண்டு நிறுவனங்கள் பங்களிப்பு வழங்காது. இந்நிலை இன்னும் மிக மோசமாகி இலங்கையின் தனிநபர் வருமானம் 4088 அமெரிக்க டொலராக அதிகரிக்கப் போகின்றது. இதன் பின்னர் இலங்கைக்குள் எந்த நிதி நிறுவனங்களும் பணியாற்ற முடியாது. இது எங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கான அழுத்தமும் உங்கள் மூலமாக சர்வதேசத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

யுத்த காலத்தில் எகெட்- கரித்தாஸ் நிறுவனத்தின் பணி இன்றியமையாததாக அமைந்திருந்தது. குறிப்பாக கிராமப்புறங்களில் எமது தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றியதுடன் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பெருந்தொண்டாற்றிய பெருமையும் இந்த எகெட் நிறுவனத்திற்கு உண்டு.

தற்காலத்தில் பெரும்பாலான அரச தண்ணார்வ தொண்டு நிறுவனங்களினால் இந்த நாட்டில் பெரியளவிலான மாற்றங்கள் இடம்பெறுவதில்லை. யுத்தம் நிறைவடைந்த பின் வறுமை நிலை அதிகரித்தக்கொண்டே செல்கின்றது கல்வியின் தரம் குறைந்து கொண்டே செல்கின்றது. ஆனால் பல நிதி நிறுவனங்களின் நிதிச் செலவு வீதம் மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

எனவே நாங்கள் இங்கே ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தேவையான இடத்தில் தேவையான முறையில் எமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றோமா? என்பதை நாம் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கின்றோம் ஆனால் வறுமை நிலை உயர்ந்து கொண்டே செல்கின்றது. அப்படியாயின் நாங்கள் பொருத்தமான முறையில் பணியாற்றவில்லை என்பதுதான் அர்த்தம்.

கடந்த கொடுங்கோல் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பானது மக்கள் ஆணையுடன் வெளியேற்றி இருந்தது. அந்த ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடமுடியாது. தமிழ்த் தலைவர்கள் வணக்கஸ்தலங்களுக்குள் வைத்தும் சுடப்பட்டார்கள். இன்று இந்நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை. ஒருவேளை சிலர் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு விருப்பமின்றி இருக்கின்றார்களோ தெரியவில்லை. 

அல்லது எமக்கு கிடைத்ததை பயன்படுத்துவதற்கு விருப்பம் இல்லையோ தெரியவில்லை. எனவே நாமக்கு கிடைத்ததை பயன்படுத்த வேண்டும் பயன்படுத்தினால் தான் அது எங்களுக்குப் பிரியோசனமாக இருக்கும். என்றும் சுட்டிக்காட்டினார்.