மக்கள் அனைவரும் தண்ணீர் தொழிற்சாலையை விரும்பவில்லை என்பதை ஹர்த்தால் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள் - சரவணபவன்
இன, மத பேதமின்றி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவருமே, தாம் இந்த தொழிற்சாலை உருவாகுவதை விரும்பவில்லை. என்கின்ற பொதுசன அபிப்பிராயத்தை இந்த ஹர்த்தால் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். எமது மக்கள் தங்களின் எதிர்ப்பினை முழு உலகிற்குமே பறைசாற்றி இருக்கிறார்கள் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இடம்பெற்ற பூரண ஹர்த்தால் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புல்லுமலையில் அமைக்கப்பட்டு வருகின்ற குறித்த தண்ணீர் தொழிற்சாலையால் புல்லுமலையில் வசிக்கும் மக்கள் மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் அனைவரும் குடிநீர் இன்றி அலையும் நிலை உருவாகும். நாம் இன்று இந்தத் தொழிற்சாலையை அமைக்க அனுமதிப்போமானால் நாளை இதே போன்ற பல தொழிற்சாலைகளுக்கு இடமளிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, எமது மாவட்ட மக்கள் அனைவருமே குடிநீர் இன்றி அலையும் நிலை உருவாகும். இதற்காகவே இன்று எமது மக்கள் தங்களின் எதிர்ப்பினை முழு உலகிற்குமே பறைசாற்றி இருக்கிறார்கள்.
புல்லுமலை என்கின்ற பிரதேசம் மிகவும் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்கள் வாழும் பிரதேசம். அது மட்டுமன்றி கோடை காலங்களில் அப்பிரதேசங்களுக்கு, பிரதேச சபையின் ஊடாகவே குடிநீர் வழங்கப்பட்டும் வருகின்றது. இவ்வாறான நிலையில் இப்படிப்பட்ட வறட்சியான ஒரு பிரதேசத்தில் பாரியதொரு தண்ணீர் உறிஞ்சும் தொழிற்சாலையொன்றினை அமைப்பதென்பது பொருத்தமானதொன்றல்ல. இதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? இது அதிகாரிகளின் தவறா? அல்லது அரசியல்வாதிகளின் செயலா? என்பது பற்றி கட்டாயம் ஆராயப்பட வேண்டும்.
குடிநீருக்கே அல்லல்படும் மக்கள் வாழும் ஓரிடத்தில் தண்ணீர் தொழிற்சாலையொன்றினை அமைப்பது என்பதில் எமக்கு ஒருபோதும் உடன்பாடில்லை. அத்துடன் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுவரும் காணியானது 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் பல தடவைகளுக்கு மேல் உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தக் காணியின் உரிமைத் தன்மையின் மீது சந்தேகம் கொள்ள வைக்கின்றது. எனவே சட்ட வல்லுனர்கள், நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள சட்ட நடவடிக்கைகளின் போது, இக் கோணத்திலும் ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இந்தப் பிரச்சனையை ஜனாதிபதிக்கும் கொண்டு சேர்த்துள்ளது. எந்த வழியிலாவது இந்த தொழிற்சாலையை நிறுத்த வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்;றுசேர வேண்டும். எமது பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சி சார்பின்றி பல சமுக ஆர்வலர்களும் பல வழிகளில் இந்த குடிநீர் தொழிற்சாலைக்கு எதிராக போராடி வருகின்றார்கள்.
இதனடிப்படையிலேயே இன்றைய இந்த மாவட்டம் தழுவிய ஹர்த்தாலும் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக இடம்பெற்றது. அனைத்து மக்களும் இன, மத, பேதமின்றி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். குறிப்பாக மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் இன, மத பேதமின்றி அரச, தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்ததைக்காண முடிந்தது. இதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவருமே, தாம் இந்த தொழிற்சாலை உருவாகுவதை விரும்பவில்லை. என்கின்ற பொதுசன அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அரசாங்கமும், சர்வதேச சூழல்சார் அமைப்புகளும் இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எமது மக்களின் உணர்வுகளுக்கும், வாழ்வுரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.














