"கல்வியும் சமூகமும்" கட்டுரை வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவி


  "கல்வியும் சமூகமும்" கட்டுரை வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவி 

கல்வி, சமூகம் என்ற இரு விடயங்களும் ஒன்றுடனொன்று தொடர்புபட்ட எண்ணக்கருக்களாகும். ஒரு சமூக இருப்பிற்கு கல்வியின் பங்கு மிகப்பெரியதாகும். கல்வி என்பது பிள்ளையின் உள்ளே இருக்கின்ற ஆற்றலை வெளிக்கொண்டு வருவதாகும். கல்வியை வழங்குவதில் சமூகத்தின் பங்கானது முக்கியமானதாகும். கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகின்றது. 
பல்வேறு கல்வி சார் பிரச்சனைகளுக்கு சமூகம் விளக்கங்களைக் கொடுப்பதோடு சமூக பிரச்சனைகளுக்கு சிறந்ததொரு தீர்வினையும் கல்வியே பெற்றுத்தரும். சமூக கடமைகளில் பிள்ளைகளுக்கான கல்வியை பெற்றுப் கொடுத்தல் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. காரணம் ஒரு மனிதரால் இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதும், நிரந்தர தன்மை கொண்டதுமான சொத்து கல்வி ஆகும். ஒரு பிள்ளை உலகத்தை அறிய சமூகத்தால் முதலில் அங்கீகரிக்கப்படும் சாதனம் கல்வியே ஆகும்.
அறிவு, திறமை போன்றவற்றை வழங்கி ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை போன்றவற்றை அளித்து ஒரு முழுமையான ஆற்றல் படைத்தவனாக மாற்றுகின்றது கல்வி. கல்வியானது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வரும் குழந்தைப் பருவத்திலிருந்து கற்கும் போதே முழுமையான பரிணாமம் அடைந்து முழு மனிதனாகவும், சமுதாயத்திற்கு உதவிகளை வழங்குபவனாகவும் மாற்றம் பெறுகின்றான். 
குடும்;பத்தினனப் பற்றிய பின்னனியை வழங்கிய பின்னரே ஆரம்பக்கல்விக்கான அடிப்படைகளைக் சமூகம் வழங்குகின்றது. அதன் ஊடாகவே மாணவர்கள் தங்களது கல்வியினைப் ஆரம்பிக்கின்றனர். ஒரு குழந்தையானது தாயின் கருவறையிலே முதல் கல்வியைப் பெற்றுக்கொள்கின்றது. பின்னர் ஐந்து வயது பூர்த்தியாகும் வரை தனது கற்றலை தன் சமூககத்தில் இருந்து பெறுகின்றது. உதாரணமாக குழந்தையினுடைய தேவைகள், வசதிகள் என்பவற்றை அறிந்து அவர்களுக்கு அறிவு பூர்வமான அனைத்தையும் வழங்குபவர்களாக அக் குழந்தையின் குடும்பம் விளங்குகின்றது. ஆனால் அவை அனைத்தும் பூரணமாக நிறைவேற்றப்படாமல் போகும் சந்தர்ப்பத்தில் நெறிபிறழ்வான நடத்தை கொண்ட குழந்தையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
காலத்திற்கு காலம் சமூக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. மாற்றமானது நிரந்தரமான ஒன்றில்லை. கால மாற்றத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். அம்மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு கல்வியியலாளர்கள் பயணிக்கின்றனர். இஸாக் எனும் அறிஞர் குறிப்பிடுகையில் 'ஒரு கல்வியியலாளன் எல்லாக் கோட்பாடுகளையும் கற்றிருந்தாலும் அவன் காலம், இடம் என்பவற்றிலிருந்து தப்ப முடியாது' என குறிப்பிடுகிறார். மனிதனுடைய அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, உறையுள் எனக் காணப்பட்ட அனைத்தும் தற்காலத்தில் மாறுபட்டு செல்வதைக் காணமுடிகின்றன. இவற்றையெல்லாம் சிறப்பாக கொண்டு செல்ல பயன்படுத்தும் ஊடகமாக கல்வி விளங்குகின்றது. 
இன்று பல்வேறு நிலைகளிலும் கல்வி போதிக்கப்பட்டு வருவதைக் காணலாம். ஆரம்ப காலங்களில் கல்வி வாய்மொழிக் கற்றலாக காணப்பட்டது ஆனால் இன்று இணையத்தளம் வரை பரந்து சென்றுள்ளது. இது சமூகத்தில் கல்வியில் ஏற்பட்ட மாற்றமாகும்.

பாடசாலைக் கல்வியானது உறுதியாக மாணவர்கள் மத்தியில் விதைக்கப்படுவது அவசியமாகும். முன்பள்ளி பாடசாலையிலிருந்தே சமூகப்படி நிலைகள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றது. இதனால்; ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அவ்வாய்ப்பை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர். ஒரு மாணவனை கல்வியில் புகுத்தும் போது அம்மாணவன் சமூகத்திலுள்ளவர்களை எவ்வாறு மதிக்கின்றான், எவ்வாறு உரையாடுகின்றான், உரிமைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ள வேண்டும், அதனை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பதை மாணவர்களுக்கு சமூகமானது கற்றுக் கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் கல்வியின் ஊடாகவே நிறைவேற்றப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் பிள்ளைகளின் கற்றல் வீதமானது குறைவாகவே காணப்படுகிறது. மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் காரணமாக கிடைக்கப்பெற்ற அனுபவம், அறிவு என்பன கல்வியின் தேவையை அதிகரிக்கச் செய்தது. சமூகத்தி;ல் நல்ல பிரஜையாக திகழ வேண்டுமானால் சமூக மதிப்புக்கள், குறிக்கோள்கள், நம்பிக்கை, விருப்பு, பழக்கவழக்கங்கள், பண்பாடு என்பவற்றை பெற்றிருக்க வேண்டும். இதற்கு கல்வியே இன்றியமையாதது.
கல்வி பெற்ற சமூகத்தினர் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிச் செல்லும் போது சமூகத்திற்கு ஏற்ற மாதிரி கல்விச் செயற்பாடும் அமைகின்றது. பெண்கள் வேலைக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்படுவதனால் அவர்களினுடைய கலாசாரம், பொருளாதாரம் போன்றவற்றை கல்வியே நிர்ணயம் செய்கின்றது. 

தனிமனிதனை சமூக வினைத்திறன் கொண்டவனாக மாற்றுவதற்கு தொழிற்கல்வி அவசியமானதாக அமைகின்றது. சமூகத்தில் ஒருவரது தொழிலினைக் கொண்டே அவரது அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் தொழில் பற்றிய கல்வி அனைவருக்கும் மிகவும் அவசியமானதாக காணப்படுகிறது. இவ்வாறு தொழிலை பெற்றுக் கொள்வதற்காக தொழிற்பாடங்களை இலங்கை சமூகமானது கலைத்திட்டத்தில் சேர்த்துள்ளது. உதாரணமாக, வாழ்க்கைத்தேர்ச்சி, விவசாயம், தொழிநுட்பவியல் ஆகும்.
தொழிநுட்பவியல் சார் கல்வியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்று வருகின்றது. கணணி, இணையம் போன்ற தொழிநுட்பங்களின் ஊடாக ஒவ்வொரு மாணவரும் பல விடயங்களைக் கற்றுக் கொள்கின்றனர். தொழிநுட்பவியல்சார் கருவிகளை எவ்வாறு உபயோகிப்பது தொடர்பான அறிவு கல்வி மூலம் ஏற்படுத்தப்படுகின்றமை முக்கிய விடயமாகும்.
மாணவர்களை முழுமையாக சமூக இயல்பு பெற்றவர்களாக ஆக்குவதே கல்வியின் நோக்கமாகும். இதற்கு பாடசாலையானது மிகவும் பங்காற்றி வருகின்றது. காலமும், நேரமும் மாற்றமுற்றுக் கொண்டே செல்கின்றன. அதற்கேற்ப கல்வியும் சமூகத்திற்கேற்ப விருத்தி பெற்று வருகின்றது எனலாம்.
க. ரக் ஷனா 
2ம் வருடம் சிறப்புக்கற்கை
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்