மாணவர்களின் ஆளுமை விருத்தியில் இணைப்பாட விதானத்தின் பங்களிப்பு


பாடசாலைகளில் மாணவர்கள் அறிவு திறன் மனப்பாங்கு விழுமியம் போன்ற காரணிகளின் ஊடாக தங்களை தேர்ச்சி அடைய செய்வதே இன்றைய கல்வியின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. இவர்களை  சமூகத்தில் நல்ல ஆளுமைமிக்க நபராக உருவாக்குவதில் பாடசாலையின் பங்கு அளப்பெரியது. பாடசாலையில் காணப்படும் இணைப்பாட விதானங்களின் பங்களிப்பு சமூகத்தில் ஒரு நன்மதிப்புள்ள மாணவராக உருவாக வழிகாட்டுகின்றது. இன்றைய பாடத்திட்டங்களில் இணைப்பாட விதான செயற்பாடு கலை திட்டங்களில் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாணவன் தமது பாடநெறிகளில் ஒன்றை மட்டும் கற்று துறைசார் அறிவினை பெறுவதன் ஊடாக ஆளுமையை பெற்றுவிட முடியாது. அவர்கள் இணைப்பாட விதானங்களில் பங்குகொள்ளும் போதே சமூகம் பற்றியும், சமூக நடத்தைகள் சார்ந்த பழக்க வழக்கங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வழியேற்படுகின்றது. இந்த அடிப்படையிலேயே மாணவர்கள் தங்களை சமூகத்திற்கு ஏற்றவகையில் வழிப்படுத்தி கொள்கின்றனர். இதற்கான அடித்தளத்தை பாடசாலை விட வேண்டும்.

18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த கல்வியியல் சிந்தனையாளரும், உள மருத்துவருமான மொண்டிசோரி அம்மையாரின் கருத்துப்படி, “அழிவுக்கு வழி திறக்கும் வாசல்களான புலன்களுக்கும், தசைகளுக்கும் நன்கு பயிற்சி அளிக்கக்கூடியதாக கல்வி அமைதல் வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார். அதேபோன்று குழந்தை பூங்கா என்னும் கல்விமுறையை ஆரம்பித்து வைத்த புரோபரல், “பிள்ளைகளின் வளர்ச்சிக்கு மதிப்பளித்து அவர்களை நல்வழிகளில் வளர்க்க விளையாட்டு மூலம் கல்வி அளித்தல் அவசியம்” என இம் முறையால் பிள்ளைகளின் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து வளர அது காரணமாக அமையும் என கூறியுள்ளார். கல்வியலாளர் ஜோன் டியூவி குறிப்பிடுகையில், "ஒருவனது சூழலை பயன்படுத்த உதவுவதும் அவனது பொறுப்புக்களை நிறைவுசெய்ய உதவுவதுமான ஆற்றல்களை விருத்தி ஆக்குவதே கல்வி” எனக் குறிப்பிடுகின்றார். இதற்கமைய மாணவர்கள் சமூக அங்கத்தவர்களாக திறம்படச் செயற்பட தமது ஆளுமை விருத்திகளை விருத்தி செய்ய வேண்டியதாகிறது. இதற்கு இணைப்பாட விதானங்களின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாகும்.

பாடசாலைகளில் விளையாட்டு போட்டி, கலைவிழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், சாரணிய இயக்கம் போன்ற பல செயற்பாடுகளின் ஊடாக மாணவர்கள் சேர்ந்தியங்கும் திறன், பொருந்தி வாழும் தன்மை, வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு, உற்சாகம், பேச்சாற்றல், தலைமைத்துவ பண்பு என உடல், உள, சமூக, மனவெழுச்சி சார் பல விருத்திகளைப் பெறுகின்றனர். அதுபோல் பாடசாலையில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் மாணவர்களின் ஆளுமை விருத்தியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்கின்றது. மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின் ஊடாக பாடசாலைக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவுவலுப் பெறுகின்றது. இதனூடாக மாணவர்களும் சமூகமயமாக்கப் படுகின்றனர். பாடசாலைகளில் ஏற்படுத்தப்படும் கண்காட்சி, சிரமதானம், சுற்றுலா போன்ற பல செயற் திட்டங்களின் ஊடாக பல விடயங்களை மாணவர்கள் அனுபவரீதியாக அறிந்துகொள்ள முடிகின்றது. குழுவாக செயற்படுவதும், ஏனைய மாணவர்களுடன் கலந்துரையாடி, ஒற்றுமையை விருத்தி செய்வதும், நிகழ்வுகளை முன்னெடுப்பதும், போன்ற பல திறன்களை இவற்றினூடாக பெற்றுக்கொள்கின்றனர். நவீன கல்வி, எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையிலான மாணவர்களை உருவாக்குவதில் அக்கறை காட்டுகின்றது. இதனாலேயே இன்று பாடசாலைகளில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி பல செயற்பாட்டு வேலைகள், ஒப்படைகள், தனியாள் செயற்திட்டங்கள் போன்ற பல செயல்களிலும் மாணவர்கள் பங்கெடுக்கின்றனர். இலக்கிய மன்றம், விஞ்ஞானமன்றம், ஆங்கில மன்றம், நுண்கலை மன்றம், நாடக மன்றம், நூலக மன்றம், சமய விருத்தி மன்றம், ஏனைய பாடங்கள் தொடர்பான மன்றங்கள், இலக்கியக் கழகங்கள், கலைக்கூடம், மாணவர் மன்றங்கள் போன்ற பல நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக ஆளுமை பண்புகளை விருத்தியாக்கிக் கொள்கின்றனர்.

தலைமைத்துவம் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு போன்ற பல மனிதப் பண்புகளை மாணவர்கள் பாடசாலை செயற்பாடுகளின் ஊடாக பெற்றுக்கொள்கின்றனர். கண்காட்சி ஒன்றை பாடசாலையின் நடாத்தும்போது பல பொருட்களை மாணவர்கள் தயாரிக்கின்றார்கள். தயாரித்த பொருட்களை சமூக அங்கத்தவர்களுக்கு விபரிக்கின்றனர். இதனூடாக ஆக்கத்திறன் வளர்ச்சி மாணவர்களுக்கு ஏற்படுவது மட்டுமல்லாமல் விளங்கப்படுத்தும் ஆற்றலும் மாணவர்களிடம் விருத்தியடைகின்றது. சுற்றுலாவின் ஊடாக மாணவர்கள் கண்காணாத பல விடயங்களை நேரில் கண்டு மகிழ்வதன் ஊடாகவும், அனுபவிப்பதன் ஊடாகவும், தமது ஆளுமை விருத்தியை மென்மேலும் வளர்ச்சி அடையச் செய்கின்றனர். உடற்பயிற்சியின் ஊடாக உடல்திறன் வளர்ச்சி அடைந்து இதன் மூலம் உற்சாகம் அடைகின்றனர். இதனால் கல்வியில் சோர்வின்றி ஊக்கமாக ஈடுபட முயற்சி செய்கின்றனர். எனவே இணைப்பாட விதானங்களின் பங்களிப்பு மாணவர்களின் ஆளுமை விருத்தியில் பிரதான அம்சமாக அமைந்துள்ளது.

இன்று பாடசாலைகளுக்கு இடையே தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டி, பட்டிமன்றம், மற்றும் கலை நிகழ்வுகள், வினாடி வினா போட்டி, விளையாட்டு போட்டி என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கு பற்ற சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனை ஓர் ஆசிரியர் மாணவர்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், மாணவர்கள் இந்நிகழ்வுகளில் பங்கு பற்றவும் ஆர்வமாய் இருத்தல் வேண்டும். இதற்கு தங்களை தயார் செய்து விருத்தியாக்கிக் கொள்வது ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் பொறுப்பாகும். எனவே ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக அக்கறை செலுத்துபவர்களாகவும் காணப்படவேண்டும். அப்போதே இவர்கள் சமூகத்தில் பல திறமைகளை வெளிக்காட்ட சந்தர்ப்பங்கள் ஏற்படும் எனவே மாணவர்களுக்குத் தேவையான ஆளுமை பண்புகள் பாடசாலைகளில் இணைப்பாட விதானங்களினூடாக மாணவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

பிள்ளையின் பூரண விருத்திக்கு இணைப்பாட விதான செயற்பாடு இன்றியமையாதது என்பதால், வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கு புறம்பாக அவற்றோடு இணைந்த வகையில், இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் கூடுதலான அக்கறையை வழிகாட்ட வேண்டியது அதிபர் ஆசிரியர்களது கடமையாகும். ஆயினும் பாடசாலை நேரசூசியில் இதற்கான நேரத்தை ஒதுக்குவதில் இடர்பாடு காணப்பட்டாலும், அதன் அவசியத்தை உணர்ந்து பாடசாலை நேரத்தில் வாரத்தில் ஒரு முறை அல்லது இரு முறை பாட வேளையை ஒதுக்கி அதில் பிள்ளைகளை ஈடுபடச் செய்யலாம். அல்லது பாடசாலை முடிந்த பின்னர் ஒழுங்குபடுத்தி இதனை நடைமுறைப்படுத்தலாம். எவ்வாறாயினும் இணைப்பாட விதான செயற்பாட்டினை கூடிய வினைத்திறனை தரும் வகையில் அமுல்படுத்துவது அதிபர், ஆசிரியர் போன்றோரின் ஆர்வம், அற்பணிப்பு என்பனவற்றிலேயே தங்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்திலேயே மாணவர்கள் மத்தியில் ஆளுமைத்திறன் வளர்ச்சி அடைந்து சமூகத்தில் ஆளுமை மிக்க நபர்களாக திகழ முடியும்.


ந.கிருசாந்தினி
இரண்டாம் வருடம்,
கல்வியல் சிறப்பு கற்கை,
கல்வி பிள்ளைநலத்துறை,

  • கிழக்கு பல்கலைக்கழகம்.