உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி சில தினங்களில் !- சுசில் பிரேமஜயந்த


கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை செயன்முறை பரீட்சை இந்த வாரத்துக்குள் நிறைவடையும். பரீட்சை பெறுபேறுகளை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்னும் சித தினங்களில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறு இதுவரை வெளியிட முடியாமல் போயிருப்பதன் காரணம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த மாதம் ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட அசம்பாவித நிலைமைகள் காரணமாகவே கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தாமதிக்க காரணமாகும்.

ஏனெனில் உயர்தர பரீட்சையின் சென்முறை பரீட்சைக்கு சுமார் 400 மாணவர்களுக்கு அந்த காலப்பகுதியில் கலந்துகொள்ள முடியாமல் போயிருந்தது.

அதனால் அந்த மாணவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை மீண்டும் வழங்கவேண்டி இருக்கி்ன்றது. அதன் பிரகாரம் நாளை 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை செயன்முறை பரீட்சை இடம்பெறுகின்றது.

அதற்கிடையில் பரீட்சை தொடர்பான ஏனைய நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அத்துடன் செயன்முறை பரீட்சை பெரும்பாலும் இந்த வாரத்துடன் முடிவடையும். அதன் பிரகாரம் உயர் தர பரீட்சை பெறுபேறு எப்போது வெளியிட முடியும் என்பதை பரீட்சைகள் ஆணையாளர் இன்னும் சில தினங்களில் அறிவிப்பார்.

அதேபோன்று பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாங்கள் மாணவர் சங்கங்களுடன் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடி இருந்தோம்.

அவர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதேநேரம் அரசாங்கமும் பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அந்த மாணவர்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அத்துடன் பல்கலைக்கழங்களில் கஹபொல மற்றும் வேறு கொடுப்பனவுகளை பெறும் சுமார் ஒரு இலட்சத்தி 40ஆயிரம் மாணவர்கள் இருக்கின்றார்கள்.

அந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லை என்பதும் தற்போது பிரச்சினை என்பதுடன் அதனை எவ்வாறு திறைசேரி பெற்றுக்கொள்வது என்பதும் பிரச்சினையாகவே இருக்கின்றது.

என்றாலும் பல்கலைக்கழக கட்டமைப்பை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டுசென்று, மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக்கொடுக்கும் அடிப்படை உரிமையை நாங்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும். அதனை இலக்குவைத்து எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்கின்றோம்.

மேலும் பாடசாலை கல்வி நடவடிக்கையை 5தினங்களும் நடத்த தீர்மானிக்கப்பட்டு தற்போது இடம்பெற்று வருகின்றது. இதுதொடர்பாக எந்த முறைப்பாடும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை.

என்றாலும் நாங்கள் ஒவ்வாெரு சனிக்கிழமை நாட்களிலும் மாகாண கல்வி அதிகாரிகளுடன் இணையவழியில் கலந்துரையாடி, இதுதொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். போக்குவரத்து வசதி குறைவாக காணப்படும் பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவைகளை அதிகரிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.