இரக்கத்தன்மையற்று பசுவின் காலை துண்டாடிய விஷமிகள்!


வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருந்த பசு மாடொன்றின் கால் ஒன்றினை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மூளாய் , முன்கோடை பகுதியில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வருகின்றார். அந்நிலையில் வழமை போன்று தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார்.

மாடுகளை அவிழ்க்க சென்ற போது பசுவின் கால் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் மற்றுமொரு காலில் காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் மாடு கிடந்துள்ளது.

அதனை அங்கிருந்து மீட்ட போதிலும் மாடு வலியினால் உணவு உட்கொள்ளாது இருக்கின்றது. இது தொடர்பில் வட்டுக்கோட்டை கால் நடை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு அளித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.