மரணித்த பெண்ணுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய நாய் : வாழைச்சேனையில் சம்பவம் !

மரணமடைந்த பெண்ணை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை நாய் ஒன்று கண்ணீருடன் சென்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை எனும் வயோதிபப் பெண்ணொருவர் அவரது வீட்டில் பல வருடங்களாக நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில்,  சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வயோதிபப் பெண்மணி அவரது மகளின் வீட்டில் வசித்து வந்த போது மூதாட்டி வளர்த்த நாய் அவரது மகளின் வீட்டுக்கும் சென்றுள்ளது.

இவ்வாறு மகளின் வீட்டில் வசித்து வந்த மூதாட்டி புதன்கிழமை (15) மரணமடைந்துள்ளார்.

மூதாட்டி மரணமடைந்ததை உணர்ந்து கொண்ட நாய் கண்ணீர் சிந்தி மூதாட்டியின் உடல் அருகில் நின்றுள்ளது.

மரணமடைந்த மூதாட்டியின் உடல் அவரது மகளின் வீட்டிலிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிண்ணையடி இந்து மயானத்தில் வியாழக்கிழமை (16) நல்லடக்கம் செய்யப்பட்டது.

மூதாட்டியின் இறுதிக் கிரியையில் மக்களோடு சேர்ந்து நீண்ட தூரம் பயணித்த நாய் பட்டாசு சப்தத்தையும் பொருப்படுத்தாமல் மண்ணறை வரை சென்று தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு நன்றியுள்ள அந்த நாய் நல்லடக்கத்தின் பின்னர் மீண்டும் மூதாட்டி வசித்த இடத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.