மட்டக்களப்பில் பைபிளுடன் நடமாடிய முஸ்லிம் நபர் கைது


(சரவணன் )

மட்டக்களப்பு நகரத்தில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றுக்குள் பைபிளுடன் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய முஸ்லிம் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தொடர்பில் சந்தேகமடைந்த பொதுமக்கள், அவரை மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வெளிநாட்டில் இருந்து திரும்பிய, கிண்ணியாவைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் நோயை குணப்படுத்த சீயோன் தேவாலயத்துடன் தொடர்பு கொண்ட போது அவரை விசேட வழிபாட்டில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

சம்பவதினமான ஞாயிறு காலை 7 மணியளில் கிண்ணியாவில் இருந்து மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்துக்கு அந்த நபர் வந்திறங்கியுள்ளார்.

பின்னர், அருகிலுள்ள வை.எம்.சி.ஏவுக்கு அருகாமையிலுள்ள கிறிஸ்தவ சபை ஒன்றுக்குள் தலையில் தொப்பி அணிந்தவாறு பைபிளுடன் சென்று நடமாடியுள்ளார்.

இதனையடுத்து அங்கு ஆராதனையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அவர் மீது சந்தேகம் கொண்டு அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.