சர்வதேச சுரங்க மற்றும் கனிம தொழில்துறை சார்ந்த நிகழ்வுகள் ஒக்டோபரில் : நசீர் அஹமட்!

இலங்கையில் முதலாவது சர்வதேச சுரங்க மற்றும் கனிம உச்சிமாநாடு, முதலீட்டாளர் மன்றம் மற்றும் கண்காட்சியை நடத்த  அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

சர்வதேச சுரங்க மற்றும் கனிம தொழில்துறை சார்ந்த இந்நிகழ்வு இவ்வாண்டு ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்மொழிவை சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் சமர்ப்பித்துள்ளார்.

இந்த சர்வதேச நிகழ்வு குறித்து அமைச்சர் அஹமட் கூறுகையில், 

இலங்கைக்கான பெருமளவான முதலீடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு இலங்கையின் கனிமங்களின் தனித்துவத்தை மீளமைப்பதன் மூலம் இடைக்கால நோக்கில் இலங்கை கனிம தொழில்துறைக்கான சர்வதேச வர்த்தக மதிப்பினை கட்டியெழுப்புவது இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.

கனிமங்கள் இயற்கையின் நன்கொடை. பல அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் அந்நியச் செலாவணி வருவாயில் கனிம ஏற்றுமதி பிரதான பங்காற்றுகிறது. 

ஒரு நாடு உச்சபட்ச கனிம வளங்களை பெற்றால், அந்நாட்டினால் பொருளாதார சுபீட்சத்தை அடைய முடியும். 

பெரும் அந்நியச் செலாவணி பற்றாக்குறைக்கு இலங்கை முகங்கொடுத்திருக்கும் இவ்வேளையில், கனிமங்களின் ஏற்றுமதி மற்றும் கனிமம் அடிப்படையிலான பெறுமதி சேர்ப்பு உற்பத்திகள் இலங்கையின் அடுத்த 'பில்லியன் டொலர் தொழில்துறையாக' மாறுவதற்கான அதிக ஆற்றலை கொண்டதாக உள்ளது.

சுற்றாடல் அமைச்சின் நோக்கெல்லைக்குள் இருக்கும் புவிச்சரிதவியல் அளவைச் சுரங்கப் பணியகம் (GSMB) இலங்கையில் உள்ள 43 கனிம வளங்களை அடையாளம் கண்டு அட்டவணையிட்டுள்ளது. 

அவற்றில், கிராபைட், கனமான கனிம மணல், சுண்ணாம்புக்கல், உருவளவைக் கற்கள், வைன் குவாட்ஸ் முதலியவை மிக மதிப்புடைய ஏற்றுமதி வாய்ப்புடையவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.    

கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு கொள்கைகளின் காரணமாகவே இலங்கையால் உண்மையான மற்றும் உலகத் தரம் வாய்ந்த கனிம மற்றும் சுரங்கத் தொழில்துறை பங்குதாரர்களை கவர முடியாமல் போனது. மறுபுறம், இது நாட்டின் பல வாய்ப்புகளையும் இழக்கச் செய்து, தொழில்துறையின் வளர்ச்சியை தடுத்து, போட்டி, எதிர்ப்புத் தொழில்துறை நடைமுறைக்கு வழிவகுக்கிறது.  

ஜனாதிபதியின் அண்மைய வரவு / செலவுத் திட்ட உரையில் ஏற்றுமதிகளின் 3 பில்லியன் டொலர்கள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் 3 பில்லியன் டொலர்களை ஈட்ட இலக்கு நிர்ணயித்தார். அதனால், வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் புதிய ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபடும் துறைகளை ஆரம்பிக்க வேண்டியிருப்பதோடு, புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. 

கனிமங்கள் அவ்வாறான புதிய ஏற்றுமதித் துறையாக இருக்கலாம். அது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை சேமிக்கும் அதேவேளை பல தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் கனிம அடிப்படையிலான இறக்குமதி மாற்றுத் தொழில்துறைகளின் வளர்ச்சி மற்றும் ஏனைய தொழில்துறைகளின் உருவாக்கத்துக்கு காரணமாகக்கூடும்.  

இலங்கையில் கனிம மற்றும் சுரங்கத் தொழில்துறையானது ஜனாதிபதியின் தொழில்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 'அதிக முதலீடு மற்றும் அதிக ஏற்றுமதி' சாத்தியங்களை பயன்படுத்தும் மூலோபாய பொருளாதார நோக்கை செயலாக மாற்றுவதில் சிறந்த உதாரணமாக உள்ளது. 

1957இலேயே இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட் நிறுவப்பட்டிருந்தபோதும் பெறுமதி சேர் கனிம உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு முடியாமல் போயுள்ள  இலங்கையின் துரதிர்ஷ்ட நிலையை முடிவுக்கு கொண்டுவந்து ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் கனிம மற்றும் சுரங்கத் தொழில்துறை மிக விரைவில் வெளிப்படையான மற்றும் பொறுப்பான வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்று அமைச்சர் அஹமட் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் அவர், திட்டமிடப்பட்டிருக்கும் சர்வதேச தொழில்துறை நிகழ்வானது 'புதிய எல்லைகளுக்குள் நுழைதல்' என்ற கருப்பொருளைக் கொண்டிருக்கும்.

இந்த பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வானது பரந்தளவில் உள்நாடு மற்றும் சர்வதேச ரசிகர்களை கவரும். 

மேலும், புதிய எதிர்பார்ப்புகளை வழங்கி, அதிநவீன தொழில்நுட்பத்தை பகிர்தல், கனிமங்கள் குறித்த தேசிய நிகழ்ச்சி நிரலை இயக்கும் அறிவு, நுண்ணறிவு மற்றும் இவ்வளர்ந்து வரும் தொழிலில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்தல் என்பவற்றினூடாக நாட்டின் பொருளாதார மீட்சிக்கு பெரும் பங்காற்றும் என சுற்றாடல் அமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை இந்த நிகழ்ச்சி தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியக (GSMB) தலைவர் சஞ்சீபன் ரவி கூறுகையில், 

முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச சுரங்க மற்றும் கனிம உச்சிமாநாடு, முதலீட்டாளர் மன்றம் மற்றும் கண்காட்சி நிகழ்வானது இலங்கையின் தற்போதைய மற்றும் எதிர்கால கனிம தொழில்துறையின் அனைத்து பங்குதாரர்களுக்கும் சிறந்த தளத்தை வழங்கும். 

அந்த வகையில் இந்த நிகழ்வுகள்,

• வெளிநாடுகளில் இருந்து மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டுவருவதில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு வழங்கல்

• தனியார் மற்றும் வெளிநாட்டு நிதி வாய்ப்புகள் பற்றிய பேச்சுவார்த்தை

• தற்போதைய தொழில்நுட்பங்களுடன் புதிய தொழில்நுட்பங்களை பெறுதல் மற்றும் ஒருங்கிணைப்பதற்கான மாறுபட்ட மூலோபாயங்களை மதிப்பிடுதல்

• கனிமங்களை பிரிப்பது மற்றும் கண்டுபிடிப்பதில் வரவிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஆய்வு செய்தல்

• கூட்டாண்மைகள் / வர்த்தகப் பொருத்தம் மற்றும் உள்நாட்டு முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். 

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிவதற்கு பல நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 20க்கும் அதிகமான புகழ்பெற்ற சர்வதேச கனிம நிறுவனங்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

மேலும், இந்த நிகழ்ச்சியானது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்புகொள்வதற்கும், அவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் கொண்டு வந்து, அவர்களின் திட்டக் கருத்துக்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கும் உதவியாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.