வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !


வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் சடுதியாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,150 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத்யாப்பா குறிப்பிட்டார்.

கொழும்பில் புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் 552 முறைப்பாடுகள் பணியகத்துக்கு கிடைக்க பெற்றிருந்தது. கடந்த வருடம் 1,337 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் தற்போது அதனளவு சடுதியாக அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,156 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இந்த புள்ளிவிவரங்களின் பகுப்பாய்விலிருந்து நாம் சில முடிவுகளைப் பெறலாம்.

மக்கள் மிக விரைவாக தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். மக்களை ஏமாற்றி, வெளிநாட்டு வேலைகளை காட்டி இந்த பணத்தை சட்டவிரோதமாகவோ அல்லது மோசடியாகவோ பெற்றுக் கொள்ளும் வகையில் சில ஒழுங்கமைக்கப்பட்ட நபர்கள் செயற்பட்டு வருகின்றனர்.எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வாக செயற்பட வேண்டும் என்றார்.