பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சௌத்ரிக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையிலான கடந்தகால ஒத்துழைப்பைக் குறிப்பிட்ட பங்களாதேஷ் சபாநாயகர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அண்மைய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கை அடைந்துள்ள விரைவான முன்னேற்றத்திற்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலா வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு இலங்கைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அனுபவங்களை பறிமாற்றிக்கொள்ளவதற்கான புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தினார்.
இத்தகைய ஒத்துழைப்பு இரு நாடுகளின் ஜனநாயக பாராளுமன்ற நடைமுறைகளை வலுப்படுத்த முடியும் என்று பங்களாதேஷ் சபநாயகர் தெரிவித்தார்.
மேலும், இது நடைபெறவிருக்கும் பிம்டெக் மற்றும் இந்து சமுத்திர வளைய நாடுகளின் அமைப்பின் மாநாட்டில் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பங்களாதேஷுக்கு மருந்து உற்பத்தி துறையில் நிபுணத்துவம் இருப்பதால் இலங்கையில் மருந்து உற்பத்தியை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் இந்த சந்திப்பில் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், சர்வதேச வர்த்தகத்திற்கான கொழும்பு துறைமுகத்திற்கு மேலதிகமாக திருகோணமலை மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதாக பங்களாதேஷ் சபாநாயகர் தெரிவித்தார்.
உத்தேச கால நிலை பல்கலைக்கழகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் முதலீடு தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் எம்.டி அரிபுல் இஸ்லாம், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.