இந்தியாவின் தோல்வியை கொண்டாடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல - அமைச்சர் அரவிந்தகுமார்



இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது எமது அண்டை நாடான இந்தியா தான் முதலில் உதவியது. ஆனால் நன்றி கெட்டத்தனமாக இந்திய அணியின் தோல்வியை இங்கு சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி தோல்வி என்பது சாதாரண விடயம். அந்த வகையில் கிரிக்கெட் உலகக்கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் சில பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அவுஸ்திரேலியா வென்றுவிட்டது என்பதை விடவும் இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டது என்பதையே அவர்கள் கொண்டாடியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா உதவியிருக்காவிட்டால் இலங்கை சோமாலியா என்ற நிலையில் தான் இருந்திருக்கும். பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையும் இருந்திருக்காது. ஆகவே நன்றி கெட்டத்தனமாக இந்தியாவின் தோல்வியை கொண்டாடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என அமைச்சர் அரவிந்தகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.