சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்த 14 கடைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!சுகாதாரமற்ற முறையில் வீதியோரம் உணவுகளை விற்பனை செய்த 14 கடைகளுக்கு எதிராக கடுவெல நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொட்டாவ, தலவத்துகொடை மற்றும் கிம்புலாவல பகுதிகளில் மஹரகம பொது சுகாதார பரிசோதகர்களால் 55 தெருவோர உணவு விற்பனை செய்யும் கடைகள் நேற்று சனிக்கிழமை (02) இரவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை வைத்திருத்தல், பாதுகாப்பற்ற முறையில் உணவுகளை பராமரித்தல், பழுதடைந்த உணவுப் பொருட்களை வைத்திருத்தல், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல், உணவு தயாரிப்பவர்கள் பொருத்தமான ஆடைகளை அணியாதிருத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொட்டாவ பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத 12 கிலோ கோழி இறைச்சி மற்றும் பழுதடைந்த ஜூஸ் போத்தல்கள் என்பன பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.