நெருக்கடியைத் தீர்க்க மிகப் பொருத்தமான தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பது தற்போது உறுதியாகியுள்ளது : செஹான் சேமசிங்க!



நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துவதாகவும், எனவே எதிர்காலத்தில் அவரது தலைமை நாட்டுக்குத் தேவை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வைத்து நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளலாம் என சிலர் நம்பத் தூண்டுவதாகவும் ஆனால் அது சரியானதல்ல எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும நிவாரணங்களை வழங்கிய பின்னர், அதுகுறித்து மீளாய்வு செய்யப்பட்டு அந்தப் பணிகள் உறுதிசெய்யப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,

“அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட பின்னர், அதற்காக சுமார் 04 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதன்படி, 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கும் பணி நிறைவு செய்யப்பட உள்ளது. ஆனால் கடந்த மே மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு கோரி விண்ணப்பித்த 34 இலட்சம் பேர் குறித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதைக் கூற வேண்டும்.

மேலும், புதிதாக சமர்ப்பிக்கப்படும் 04 இலட்சம் விண்ணப்பங்கள் குறித்தும் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை மேலும் வலுப்படுத்த நாங்கள் அவ்வாறு செய்கிறோம்.

24 இலட்சம் பயனாளிகளைத் தேர்வு செய்த பிறகு, அவர்கள் தொடர்பில் தொடர்ந்து மீளாய்வு செய்ய எதிர்பார்க்கிறோம். அஸ்வெசும மூலம் வழங்கப்பட்ட பணத்தை எதற்காக செலவு செய்தார்கள்? என்றும் இது எதிர்காலத்தில் வலுவூட்டும் திட்டத்திற்கு எந்த அளவிற்கு பங்களிக்கிறது? மற்றும் இதன் ஊடாக அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.

தொடர்ந்து 6 காலாண்டுகளாக எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இருந்த நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்தோம். 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அரசாங்கமும் இணைந்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி வசதிகளை வழங்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து செயற்பட முடியுமான நிதி ஒழுக்கத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை நகர்த்தியதன் காரணமாகவே இந்த நிலையை அடைய முடிந்தது. அதன்போது மக்களுக்கு சிரமங்கள் இருந்தாலும், தற்போது அந்த சிரமங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் பணவீக்கம் 0.9% இனால் குறைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்கத் தேவையான பின்னணி உருவாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி, விலைகள் நிலையாக உள்ளன.

பொருளாதாரம் தொடர்பாக, பல்வேறு நபர்கள் சில விடயங்களை குறிப்பிட்டு, பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அவைகள் நியாயமானவைகள் அல்ல என்பது நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய தலைமைத்துவத்தைப் பாராட்ட வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துகிறது. பொருளாதார நெருக்கடியை மிகவும் திறமையாக சமாளித்தார். எனவே, அவரது தலைமை தொடர்ந்தும் நாட்டுக்குத் தேவை.

நாடு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது தவறான எண்ணம் என்பதைக் கூற வேண்டும். இப்போது நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதால் சிலர் இப்படி நம்பலாம். ஆனால் அப்படி ஒரு நிலை இதுவரை இல்லை. தற்போதைய ஸ்திரத்தன்மை மிகச் சிறந்த முகாமைத்துவம், நேரடி முடிவெடுத்தல் மற்றும் சர்வதேச நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் அடையப்பட்டுள்ளது.

ஆனால் அது யாராலும் செய்யக் கூடிய காரியம் அல்ல. தற்போதைய திட்டத்தைத் தொடர்ந்தால், 2024ஆம் ஆண்டில் 2%-க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்ற வலுவான நம்பிக்கை உள்ளது. மேலும், பணமாற்று விகிதம் வலுவாக இருந்தும், பணவீக்கம் 70 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்தாலும், விலை குறைப்பின் பலன் கிடைக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கறுப்புச் சந்தை விலையைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தாததால் இது நடந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். இதன் அடிப்படையில் அடுத்த வாரம் முதல் வாரந்தோறும் மொத்த விற்பனை விலையை பொதுமக்களுக்கு அறிவிக்க வர்த்தக அமைச்சர் முடிவு செய்துள்ளார். அதன் பிறகு சில்லறை விலைகள் குறித்து மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

மேலும், கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்று பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. IMF உடனான இரண்டாவது மறுஆய்வு இரண்டு வாரங்களுக்கு முன்பு முடிந்தது. தற்போது பணிக்குழாம் மட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது மூன்றாவது தவணையைப் பெறுவதற்கு பெரிதும் ஆதரவளிக்கும்” என்று நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.