எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் !


”உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றலுடன் வெளிப்படையான விசாரணை அவசியம்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித் தேர்தலில் உறுதியாக நான் போட்டியிடுவேன். உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படும். இந்தக் குழுவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வாளர்கள் உள்ளடக்கப்படுவார்கள். எமது அரசாங்கத்தின் கீழ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்.

விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தப்படும். அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு விசேட நீதிமன்றமொன்று நிறுவப்படும்.
இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக சுயாதீனமான அரச சட்டத்தரணிகள் கொண்ட அலுவலகமும் நிறுவப்படும்.

தற்போதைய அரசாங்கம் குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மறைத்துள்ளது. நாம் அதனை எமது அரசாங்கத்தில் வெளிக்கொண்டு வருவோம்” இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.