மாணவி துஷ்பிரயோகம் : பெண் பொலிஸ் ஒருவருடன் போலி காதல் உறவை ஏற்படுத்தி சிக்கிய இளைஞன் !


பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரை, பெண் பொலிஸ் ஒருவருடன் போலி காதல் உறவை ஏற்படுத்தி கைது செய்யப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை ( 01) பதிவாகியுள்ளது .

பண்டாரவளை கினிகம பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் முகநூல் ஊடாக நட்பை ஏற்படுத்தி அவரை கொழும்பில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று சில நாட்களாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குறித்த மாணவியின் பெற்றோரிடமிருந்து பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .
அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து , அந்த எண்ணுக்கு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரால் தொடர்பை ஏற்ப்படுத்தி காதல் ஆசை தூண்டுவது போல் நடித்து சந்தேக நபருடன் உறவை வளர்த்துள்ளனர் .

சுமார் இரண்டு வாரங்களாக இவ்வாறு பேசியுள்ளதுடன் , பெண் பொலிஸ் அதிகாரியால் தனக்கு வேலையொன்றை தேடி தருமாறு கூறவைத்ததையடுத்து குறித்த சந்தேக நபர், வெலிமடை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வருவதாகவும் , அப்போது பண்டாரவளையில் சந்தித்து , கொழும்புக்கு செல்வோம் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் பின்னர் அந்த இடத்தை மாற்றி பலாங்கொடை பஸ் நிலையத்திற்கு வருமாறு பெண் பொலிஸ் அதிகாரியிடம் கூறியுள்ளார்.

அதற்கமைய இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு , சந்தேக நபரை பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் வைத்து கைது செய்துள்ளனர் .

மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர்.