சாதாரண தரப் பரீட்சைகள் பெறுபேறுகள் வெளியாக முன்னர் உயர்தர வகுப்புக்கள் எவ்வாறு ஆரம்பிக்கப்படும்? - கல்வி அமைச்சர் விளக்கம்!!


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளையுடன் நிறைவடைகின்ற நிலையில், ஜூன் மாதம் 4ஆம் திகதி உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மாணவர்கள் எவ்வாறு உயர்தர கற்கையைத் தொடர்வது என்பது குறித்து கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிரூபம் வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. வெசாக் விடுமுறையின் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகும். பெறுபேறுகள் வெளியாவதற்கு 4 மாதங்கள் செல்லும். கடந்த டிசம்பரில் நிறைவடைந்திருக்க வேண்டிய பரீட்சை 4 மாதங்கள் தாமதமாகவே நிறைவடைந்துள்ளன. எனவே இந்த மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இவர்களுக்கான உயர்தர கற்கையை ஜூன் 4ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான கல்வி அமைச்சின் சுற்று நிரூபம் இன்று புதன்கிழமை வெளியிடப்படும்.

ஜூன் மாதம் முதலாம் திகதியுடன் இவ்வாண்டின் முதலாம் தவணைக்கான இறுதிக் கட்ட கல்வி செயற்பாடுகள் நிறைவடையவுள்ளன. 3ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பமாகும். 4ஆம் திகதி உயர்தர வகுப்புக்கள் ஆரம்பமாகும். எவ்வாறிருப்பினும் 1 - 11ஆம் வகுப்புக்கள் மாத்திரம் காணப்படும் பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் உயர்தரத்தை எங்குக் கற்பது? போன்ற சிக்கல்கள் ஏற்படும்.

அண்மைய கல்வி மறுசீரமைப்புக்கமைய நாடளாவிய ரீதியில் 1,220 பாடசாலைகள் விசேட திட்டங்களுக்கு உள்வாங்கப்பட்டு, மாகாண கல்வி திணைக்களங்கள் ஊடாக தொடர்புப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு மேலதிகமாக 350 கூட்டுப் பாடசாலை திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன.

எனவே 11ஆம் வகுப்பு வரை மாத்திரம் உள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் உயர்தர கல்வியைத் தொடர முடியும். இவ்வாறு மாணவர்களை இணைப்பதற்கு மாகாண அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காவிட்டால் அடுத்த கட்டம் என்ன செய்வது என்பதை மாணவர்களே தீர்மானிக்க வேண்டும்.

பாடசாலைகளில் இறுதி மட்ட கணிப்பீட்டு புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்கள் தமக்கான உயர்தர கல்வியைத் தெரிவு செய்ய முடியும். கொவிட் தொற்றின் பின்னர் ஏற்பட்ட கால வீண் விரயம் இனியும் தொடராமல் இதன் மூலம் தவிர்க்க முடியும். உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல், கணிதம் மற்றும் தகவல் தொழினுட்ப பாடங்களுக்காக ஜூன் முதலாம் திகதி 3,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது என்றார்.