முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை : கல்வி அமைச்சர் !


நாடளாவிய ரீதியில் செயற்படும் 18,000 முன்பள்ளி பாடசாலைகளை முறைப்படுத்தி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் முன் பள்ளிகள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தகைமை தொடர்பில் எதிர்க்கட்சி எம்பி ஹேஷா விதானகே எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

13வது அரசியலமைப்பு திருத்தத்தின்போது மொன்டிசரி என்ற விடயம் மாகாண சபைக்கு உள்ளீர்க்கப்பட்ட விடயம். அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சராக இருந்த காமினி ஜயவிக்ரம் பெரேராவே அதற்கான அடித்தளத்தை இட்டார்.

அதனை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு நானும் மேல் மாகாண முதலமைச்சராக அப்போது மேல் மாகாணத்தில் அதை அறிமுகப்படுத்தினேன். அந்த வகையில் தற்போது ஒன்பது மாகாணங்களிலும் அது நடைமுறையில் உள்ளது.

இது ஒவ்வொரு பிரதேசத்துக்கு ஏற்ப வித்தியாசப்பட்டாலும் அதன் அடிப்படை ஒன்றாகவே உள்ளது. பிள்ளைகளுக்கு மூன்று வயதிலிருந்து ஐந்து வயது வரையான காலத்திலேயே மூளை வளர்ச்சி ஏற்படுகின்றது. எமது நாடுகள் போல அன்றி அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த முன்பள்ளி விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் இந்த முன்பள்ளி செயற்பாடுகள் ஐந்து விதமாக இடம்பெறுகின்றன. கிராமங்கள் மற்றும் நகரங்களில் தனித்தனியே இந்த முன்பள்ளிகள் இயங்குகின்றன.

அமைப்புகளினாலும் முன்பள்ளி நடத்தப்படுகின்றன. அத்துடன் மாகாண சபைகளாலும் இவ்வாறான முன்பள்ளி பாடசாலைகள் செயற்படுத்தப்படுகின்றன.

சில பிரபல பாடசாலைகள் அதனோடு இணைந்ததாக இவ்வாறான முன் பள்ளிகளை நடத்துகின்றன. அத்துடன் சர்வதேச பாடசாலைகளோடு இணைந்ததாகவும் முன் பள்ளி பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் 18, 800 முன்பள்ளி பாடசாலைகள் நாட்டில் இவ்வாறு இயங்குகின்றன.

கல்வியமைச்சானது தற்போது முதல் கட்ட பயிலுனர்களை தெரிவு செய்துள்ளது. அனைத்து மாகாணங்களிலுமிருந்து பயிற்சி அளிக்கப்பட்ட 550 பேருக்கு ஆரம்ப அடிப்படை பயிற்சிகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். கல்வி அமைச்சின் பணிப்பாளர் ஒருவரும் அந்த நடவடிக்கைகளில் தொடர்பு படுகின்றார்.

யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் நாம் அனைத்து பாடசாலைகளையும் அழைத்து ஆரம்ப பாடசாலை தொடர்பான முழுமையான செயலமர்வை நடத்தி முடித்தோம். அந்த வகையில் உரிய புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாம் தவணை பாடசாலைகள் ஆரம்பமாகும் போது அவர்கள் அனைவருக்கும் பயிற்சி வழங்குவோம்.

அவ்வாறானவர்கள் கல்வி பொது தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தில் சித்தியடையாமல் இருந்தால் அவர்கள் ஆரம்பத்தில் பவுண்டேஷன் கோர்ஸ் செய்து அதன் பின்னர் டிப்ளோமோ பட்டப்படிப்பு என மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் திறந்த பல்கலைக்கழகத்தின் 26 கிளைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவர் கொழும்புக்கு வர வேண்டிய அவசியம் கிடையாது. அங்கு கற்க முடியும் என்றார்.