சஜித் பிரேமதாச பதவியேற்ற பின் இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு முன்னுரிமை !


சஜித் பிரேமதாச ஜனாதிபதி பதவியேற்ற பின் இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு முன்னுரிமையளித்து அவர்களின் அபிலாஷைகள் நிறைவு செய்யப்படும் என பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் தெரிவித்தார்.

பேருவளை தொகுதி இளைஞர், யுவதிகளுடனான சந்திப்பு பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதான காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களான திலக்கரத்ன தில்சான், எம்.எம்.எம்.அம்ஜாத் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகும். இந் நாட்டு இளைஞர், யுவதிகள் இவரின் வெற்றிக்காக அணி திரள வேண்டும்.

பேருவளை தொகுதியின் மூன்று முக்கிய தொழில் துறைகளான உல்லாசப் பயணத்துறை, இரத்தினக் கல் மற்றும் கடற்றொழில் துறைகளை முன்னேற்றி இளைஞர் யுவதிகளுக்கு இதில் சந்தர்ப்பம் வழங்கி பேருவளைப் பகுதியில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது எமது தலைவர் சஜித் பிரேமதாசவின் நோக்கமாகும்.

இன்று தேசிய மக்கள் சக்தியினர் இளைஞர் யுவதிகளை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற முயல்கின்றனர். இவர்களின் வலையில் சிக்கி தமது வாக்குகளை வீணாக்கி விடக் கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.