செய்தி சேகரிக்கச் சென்ற மலையக நிருபர் மீது தாக்குதல் !


பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பொகவந்தலாவ பிரதேச பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பலவற்றின் பிராந்திய நிருபராகப் பணிபுரியும் பொகவந்தலாவ எஸ்.சதீஸ்குமார் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வியாழக்கிழமை (14) அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ கெக்கர்ஸ்வோல்ட் இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும், குறித்த நபர் ஒருவர் தனக்குப் பின்னால் வந்து அருகில் கடையொன்றில் இருந்து கத்தியை எடுத்து தனது தலையில் தாக்கியதாக சதீஸ்குமார் தெரிவித்தார். மேலும், சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மதுபோதையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.