சுமார் 150 இற்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வருகை தந்து அறுவடைக்கு தயாராக இருக்கின்ற வேளாண்மைகளையும், பயன் தரும் பயிர் வகைகளையும், கடைகளையும் சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
காட்டு யானைகளின் தொல்லைகளினால் பொது மக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு வேளைகளில் நிந்தவூர் – அக்கரைப்பற்று வீதியிலும், காரைதீவு – அம்பாறை வீதியிலும் நடமாடுவதற்கு பொது மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றார்கள்.
இக்காட்டு யானைகளை காட்டுப் பகுதிகளுக்கு கொண்டு செல்லுமாறு வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளை பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.
இதே வேளை, 12ஆம் திகதி புதன்கிழமை சாய்ந்தமருது கமநலச் சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் அறுவடைக்கு தயராக இருந்த சுமார் 15 ஏக்கர் வேளாண்மைகளை பட்டப்பகலில் காட்டு யானைகள் நாசமாக்கியுள்ளன.
நேற்று காலை முதல் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் சாய்ந்தமருது கமநலச் சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் உள்ள வயல் வெளிகளில் நடமாடிக் கொண்டிருந்தன.
அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களுக்கு மத்தியில் மிகுந்த செலவுடன் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளை காட்டு யானைகள் அழித்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியதென் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளினால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.