
யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் பெண் ஒருவரிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கனடா வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி செய்த மற்றொரு பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.
2023ஆம் ஆண்டு, கட்டைக்காடு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடம், அவரது கணவரை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி சந்தேகநபர் பணத்தை பெற்றுக்கொண்டார்.
பின்னர் தொடர்பை துண்டித்ததையடுத்து தாம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண், பண பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டதுடன் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மருதங்கேணி பொலிஸாரின் உதவியுடன் குறித்த பெண் சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (25)செம்பியன்பற்று பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சந்தேக நபர் அதே பகுதியில் பலர் இடமும் இதே போன்று மோசடி செய்துள்ளதானதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.