உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி தினம் நாளை (27) நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது.
அதன்படி, இதுவரை அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை நாளை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், தாங்கள் போட்டியிட்ட மாவட்டத்தில் உள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைய உள்ளதாகவும், அந்தக் காலம் எவ்வகையிலும் நீடிக்கப்படாது என்றும், சட்டத்தின்படி தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
செலவு அறிக்கைகளை நேரில் வந்து சமர்ப்பிக்கலாம் என்றும், இல்லையெனில் தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பு இணையதளம் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி நாளை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தலைவர் தெரிவித்தார்.
மேலும், செலவு அறிக்கைகளை ஏற்க நாளை நள்ளிரவு 12 மணி வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு வேட்பாளரும், அரசியல் கட்சியும் தாங்கள் செலவு செய்தவை அல்லது செய்யாதவை தொடர்பான செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், செலவு செய்யவில்லை என்றால் அதுதொடர்பான குறிப்பையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
மேலும், நாளை நள்ளிரவுக்குப் பின்னர் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்கள் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதன்படி, எதிர்காலத்தில் தேர்தல் சட்டத்தின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.