வெளிநாட்டவர் மீதான தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின் தெளிவூட்டல் !


இலங்கையர் ஒருவர் வெளிநாட்டவரைத் தாக்குவது போன்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் வைரல் காணொளிக்கு பொலிஸார் பதிலளித்துள்ளனர்.

இந்த சம்பவம் 2024 பெப்ரவரி மாதம் வெலிகம பகுதியில் நடந்ததாக பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணி, கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் திகதி, பெலேனா கடற்கரையில் உள்ள ஒரு சர்ஃபிங் பயிற்சி நிலையத்தின் ஊழியர் ஒருவர் படப்பிடிப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தன்னைத் தாக்கியதாகக் கூறி முறைப்பாடு அளித்திருந்தார்.

24 வயதான சந்தேக நபர் அதே நாளில் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு 2025 செப்டம்பர் 11, அன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

அதேநேரம், சமூக ஊடகங்கள் மூலம் வெளிக் கொண்டு வரப்படும் முறைப்பாடுகள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிக்கு எதிரான சம்பவங்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

எனினும், சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் பழைய சம்பவங்களை அண்மைய சம்பவம் போல தொடர்ந்து பரப்பி, பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தவறான கருத்துக்களை பரப்பி அல்லது இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.