எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவரான ஏ.எல்.எம். அதாஉல்லாவை களமிறக்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக சில ஊடகங்களில் வெளிவந்திக்கும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோருடன் எமது கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே.
இந்தப் பேச்சுவார்த்தையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் மற்றும் சில பொதுவான விடயங்களுமே பேசப்பட்டன.
மேலும், முஸ்லிம் கட்சிகளுக்கிடையேயும் முக்கியஸ்தர்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவைக் களமிறக்குவது குறித்தோ அதற்கு எமது கட்சி இணக்கம் தெரிவிப்பது தொடர்பிலோ இந்தச் சந்திப்பில் எதுவுமே பேசப்படவில்லை என்றும் மு.கா. செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.