16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் அந்த நபர் கூறினார்.
கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி டில்ஷி அம்ஷிகா, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.