நாட்டில் மீண்டும் தலைத்தூக்கும் மலேரியா



இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 பேர் மலேரியா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரிடத்திலேயே மலேரியா தொற்று காணப்படும் நிலையில், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நெடுந்தீவு மற்றும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த குறித்த இருவரும் கடந்த வருடம், ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று நாடு திரும்பியுள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி நெடுந்தீவை வந்தடைந்தடைந்த 38 வயதான ஆண் ஒருவருக்கு மலேரியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே வேறு பல நோய்களுக்கு உட்பட்டிருந்த நிலையில், கடுமையான நடுக்கம் போன்ற அறிகுறிகளுடன் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடனடியா மாற்றப்பட்டிருந்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு மலேரியா ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சிகிச்சைகளின் பின்னர் அவரது குருதியில் மலேரியா கிருமிகள் முற்றாக அழிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டாலும் அவருக்குக் காணப்பட்ட பல்வேறு நோய் நிலைகளால், அவர் சுய நினைவற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவரும் டோகா நாட்டில் தங்கியிருந்து நாடு திரும்பிய நிலையில், அவருக்கும் மலேரியா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இவருக்கு காய்ச்சலோ அல்லது வேறு எந்த நோய் அறிகுறிகளோ காணப்படவில்லை எனவும் யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் இலங்கையில் 3 மலேரியா நோயாளர்களே அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.