முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை


முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

உடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் தரப்பு சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்துகிறது.

எனினும், இராணுவ தரப்பு, உடலம் மீட்கப்பட்ட விடயத்தில் தமக்குத் தொடர்பில்லை என்று கூறுகிறது.

அத்துடன், காவல்துறையினரின் விசாரணைக்காக ஐந்து படையினரை அனுப்பி வைத்துள்ளதாகவும் இராணுவம் கூறுகிறது.

முன்னதாக, நேற்று முன்தினம் இரவு இராணுவம் முகாமில் பணி ஒன்றுக்காகப் படையினரின் அழைப்பை ஏற்று, ஐந்து இளைஞர்கள் அங்கு சென்றதாகவும் அவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் தயார் தெரிவிக்கிறார்.

இந்தநிலையில் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியுமாறு அரசாங்க கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் நீதியை வழங்குமா? அல்லது தண்டனையிலிருந்து பாதுகாக்குமா? என்பதைப் பார்ப்பதற்கு இது மற்றுமொரு சந்தர்ப்பம் என இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் சகோதரர் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் எமது செய்தி சேவை இராணுவப் பேச்சாளரைத் தொடர்பைக் கொண்டு வினவியது.

இதற்குப் பதிலளித்த இராணுவ பேச்சாளர், தமது முகாமுக்குள் அத்துமீறி பிரவேசித்த 5 பேரை, தமது இராணுவம் பின்தொடர்ந்ததாகவும் அதில் ஒருவர் பிடிக்கப்பட்டு, அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஏனையோர் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் வரையிலான விடயங்களில் மாத்திரமே இராணுவம் தொடர்பு பட்டிருப்பதாகவும் அதன் பின்னர், இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டமைக்கும் இராணுவத்துக்கும் தொடர்பில்லை என்றும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எனினும், காவல்துறையின் விசாரணைகளுக்குப் படையினர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக இராணுவ பேச்சாளர் கூறினார்.

இதன்போது, படையினர் 5 பேர் கைது செய்யப்பட்ட தகவல் தொடர்பில் எமது செய்தி சேவை வினவியது.

இதற்குப் பதிலளித்த இராணுவ பேச்சாளர், காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தாம் சம்பவத்துடன் தொடர்புடைய படையினரை விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையின் முன்னேற்றம் தொடர்பாக எமது செய்தி சேவை, முல்லைத்தீவு காவல்துறையிடம் வினவிய போது, தற்போது விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.